5 ரூபாய் டாக்டர் திருவேங்கடம் வீரராகவன் காலமானார்…சோகத்தில் ஊர்மக்கள்!!

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக எருக்கஞ்சேரியிலும், வியாசர்பாடியிலும் தன்னை நாடி வருபவர்களிடம் 5 ரூபாய் வாங்கிக் கொண்டு மருத்துவச் சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் திருவேங்கடம் வீரராகவன் (70) நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார்.

கடந்த 1973 ஆம் ஆண்டு ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவம் பயின்ற அவர், முதலில் 2 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்தார். அதன் பின்னர் அதை 5 ரூபாயாக உயர்த்தினார். இவரது மிகக் குறைந்த பட்ச மருத்துவ சேவைக்கு மருத்துவர்கள் தரப்பில் இருந்து பலத்த எதிர்ப்பு இருந்தது.

இருப்பினும் அவர் தனது இறுதிகாலம் வரை 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்தார். காலை 9.00 மணியிலிருந்து 12.00 மணி வரை எருக்கஞ்சேரியிலும், மாலை 7.30 மணியிலிருந்து 9 மணி வரை வியாசர் பாடியிலும் அவர் மருத்துவம் பார்த்தார்.

மருத்துவர்களின் எதிர்ப்பு குறித்து ஒரு முறை அவரிடம் கேட்ட போது நான் கட்டணம் இல்லாமல் படித்தேன். அதே போல எனது சேவையும் கட்டணம் இல்லாமல் இருக்க வேண்டும் என நினைத்தேன் எனக்கூறினார். இவரது மருத்துவச்சேவையை பாராட்டிய அரசு அவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு சிறந்த மனிதருக்கான விருதை வழங்கி கெளரவித்தது. இவரது மனைவி ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்.

இவரது மகன் தீபக் மற்றும் மகள் ப்ரீத்தி ஆகியோரும் மருத்துவத்துறையில் உள்ளனர். குடும்பத்தினரின் ஒத்துழைப்பாலே தன்னால் குறைந்த விலையில் மருத்துவச் சிகிச்சை அளிக்க முடிந்தது எனக் கூறிய திருவேங்கடத்துக்கு வியாசர்பாடியில் இலவசமாக மருத்துமனை ஒன்றைக் கட்ட வேண்டும் என்பதே நீண்ட நாள் கனவாக இருந்தது.

Related Tags :

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே