இயக்குநர் மணிரத்னம், இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப், உள்பட 49 கலைஞர்கள் இணைந்து பிரதமர் மோடிக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர்.
நாட்டில் நடக்கும் கும்பல் படுகொலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர். இதுகுறித்து மிஜாப்பூர் நீதிமன்றம் 49 பேர் மீதும் தேசதுரோக வழக்குப் பதிவு செய்து உள்ளது.
இயக்குநர் மணிரத்னம், ராமச்சந்திரா குஹா, அபர்னா சென், உள்பட 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு எழுதியிருந்த கடிதத்தில் “மேற்குவங்கம், பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து சிறுபான்மை இன இளைஞர்களை ‘ஜெய்ஸ்ரீராம்’ என கோஷமிடச் சொல்லித் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இதுபோன்ற செயல்களில் இந்துமத அடிப்படைவாத அமைப்புகளே ஈடுபடுகின்றன என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பிரதமராகிய நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த கடிதம் குறித்துக் கடந்த 2 மாதங்களுக்கு முன் மிஜாப்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் புகார் மனு அளித்தார்.
இந்த புகார் மனுவை விசாரித்த மிஜாப்பூர் தலைமை நீதிபதி சூர்யா காந்த் திவாரி மனுவை ஏற்று, மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது வழக்குப் பதிவு செய்திட நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து, பீகாரில் உள்ள சர்தார் காவல் நிலையத்தில் 49 பேர் மீதும் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில், 49 பேர் மீது தேச துராக செயலில் ஈடுப்பட்டது, பிரதமரின் மரியாதையைக் குறைக்கும் வகையில் நடந்து கொண்டது, பிரிவினையை ஊக்கப்படுத்துவது போன்ற குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையில், தேசதுராக வழக்கு, பொது நலத்துக்குக் குந்தகம் விளைவிக்கும் நோக்கில் நடந்துகொண்டது, மத உணர்வைக் காயப்படுத்தியது, அமைதியை சீர்குலைத்தது எனப் பல பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சூழலில் விரைவில், பீகார் காவல்துறையினர் மணிரத்னம் உட்பட 49 பேரை கைது செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தேச துரோக வழக்கில் கைது செய்யப்படுபவர்கள் ஜாமினில் வெளிவர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.