4 மணிநேரம் ஐடி ரெய்டு – மநீம பொருளாளர் வீட்டில் ரூ.8 கோடி பறிமுதல்..!!

திருப்பூர் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி பொருளாளர் சந்திரசேகர் வீடு மற்றும் அலுவலகங்களிலும் , நடத்த வருமான வரி சோதனையில் 8 கோடி ருபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மற்றும் தாராபுரத்தில் 5 இடங்களில் நேற்று மாலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

தாராபுரம் மதிமுக மாவட்ட துணைச் செயலாளரும் தொழிலதிபருமான கவின் நாகராஜ் மற்றும் திமுக நகர செயலாளர் கே.எஸ். தனசேகர் உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டனர்.

புதன்கிழமை மாலை துவங்கிய சோதனை நள்ளிரவு முடிவடைந்தது. 

அதே போல் , திருப்பூரில் அனிதா ஹெல்த்கேர் மற்றும் அனிதா டெஸ்காட் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

திருப்பூர் லட்சுமி நகர் பிரிட்ஜ்வே காலனி பகுதியில் அனிதா டெக்ஸ்காட் என்ற பின்னலாடை நிறுவனம் நடத்தி வருபவர் சந்திரசேகர். ம.நீ.ம பொருளாளராகவும் இருக்கிறார்.

இவர் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பை மற்றும் கொரோனா கவச ஆடைகள், முக கவசங்களை உற்பத்தி செய்து அரசுக்கு வழங்கி வருகிறார்.

இவரது நிறுவனத்திற்கும் இன்று நான்கு வாகனங்களில் வந்த வருமான வரி துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டதில் திருப்பூர் மற்றும் தாராபுரம் பகுதியில் நடக்கும் சோதனையில் 8 கோடி ருபாய் அளவிற்கு கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்படிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் , சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது.

திமுக நகர செயலாளர் தனசேகர் வீட்டின் முன்பு திமுக தொண்டர்கள் நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு இருந்தனர்.

வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றதும் நகர செயலாளர் தனசேகரை இருசக்கர வாகனம் மூலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திமுக தேர்தல் பணிமனை அலுவலகத்திற்கு தொண்டர்கள் அழைத்துச் சென்றனர்.

தேர்தல் நேரம் என்பதால் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தலை முடித்துவிட்டு கோவை வருமான வரித்துறை அலுவலகத்திற்கு நேரில் வருவதாக தெரிவித்தேன் என்று தொண்டர்களிடம் கூறினார்.

இதனைத் தொடர்ந்து தொண்டர்கள் தேர்தல் பணிமனையில் இருந்து கலைந்து சென்றனர்.

திமுக, மதிமுக பிரமுகர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட்ட சம்பவம் தாராபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரம் தொகுதியில் பாஜக சார்பில் அதன் தலைவர் முருகன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே