கொரோனா 2-வது அலை பரவினால் மீண்டும் முழு முடக்கத்திற்கு வாய்ப்பு – மாஃபா பாண்டியராஜன்

“தேர்தல் முக்கியம்; பிரச்சாரம் முக்கியம்; ஆனால் மக்களின் உயிரும் முக்கியம். கரோனா இரண்டாம் அலை ஏற்படும்பட்சத்தில் ஊரடங்கு நோக்கிச் செல்லும் நிலைவரலாம்” என சூசகமாகப் பேசியிருக்கிறார் அமைச்சர் பாண்டியராஜன்.

சென்னை ஆவடியில் நேற்று தேர்தல் பணிமனை தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர் பாண்டியராஜன் கலந்துகொண்டார்.

பின்னர் அவரிடம் செய்தியாளர்கள் கரோனா பரவல் குறித்து கேள்வி எழுப்பினர்.

அப்போது பேசிய அவர், “தேர்தல் முக்கியம்; பிரச்சாரம் முக்கியம்; ஆனால் மக்களின் உயிரும் முக்கியம்.

தமிழகத்தில் கரோனா பரவல் இரண்டாம் அலையை எட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தற்போது அதிகரித்துவரும் கரோனா நிலவரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

கேரளா, மகாரஷ்டிரா மாநிலங்களில் கரோனா இரண்டாவது அலையை எதிர்கொண்டுள்ளது.

இங்கும் இரண்டாம் அலை ஏற்படும் பட்சத்தில் ஊரடங்கு நோக்கிச் செல்லும் நிலைவரலாம்.

தமிழகம் முழுவதும் முதல்வர் பழனிசாமி பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக ஏன் நிறைவேற்றவில்லை என மக்கள் கேட்பது நியாயமே;

ஆனால் அதிமுக அளித்த வாக்குறுதிகளில் பெரும்பான்மை வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது” என்று கூறினார்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 945 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 395 பேருக்கு தொற்று உறுதியானது.

தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 8,62,374. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 2,39,878 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,43,999 என்றளவில் உள்ளது.

இந்நிலையில், அமைச்சரின் இந்தப் பேச்சு கவனம் பெறுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே