அடுத்த 6 முதல் 8 வாரங்களில் இந்தியாவில் 3 ஆம் அலை வீசும் – AIIMS எச்சரிக்கை..!!

கரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலை அடுத்த 6 முதல் 8 -ஆவது வாரங்களில் தாக்கக் கூடும் என்றும், கரோனா பெருந்தொற்றின் முதல் மற்றும் இரண்டாவது அலைகளின் போது நாட்டில் ஏற்பட்ட பாதிப்புகளில் எந்தவிதப் பாடமும் மக்கள் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை என்று எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் என்டிடிவி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் பொதுமுடக்கத்தில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பெருந்தொற்றின் முதல் மற்றும் இரண்டாவது அலைகளின் போது நாட்டில் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மக்கள் எந்தவிதப் பாடமும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.

பல இடங்களில் சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிப்பதில்லை, முகக்கவசம் அணிவதில்லை. அதனாலேயே மூன்றாவது அலையை நாடு எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடியான நிலை எழலாம்.

இரண்டாவது அலையின் தாக்கத்தில் இருந்து தற்போது நாடு மீண்டு வருகிறது, இரண்டாவது அலையின்போது தினசரி தொற்று பாதிப்பு 4 லட்சத்துக்கும் அதிகமாகவும், ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளையும் கண்டது. இரண்டாவது அலைகளின் போது பல மாநிலங்கள் ஆக்ஸிஜன், மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை, மருந்து பொருள்கள் மற்றும் தடுப்பூசிகள் பற்றாக்குறையை சந்தித்தன, இதனால் மக்கள் சமூக ஊடகங்கள் வழியாக உதவி கேட்டனர்.

இந்த நிலையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக செல்வதால் மீண்டும் தொற்று அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. இதனால் நாட்டில் மூன்றாவது அலையை சந்திக்கக் கூடிய நெருக்கடியான நிலை உருவாகும். இப்போதே அதன் பாதிப்பு ஆரம்பித்திருக்கலாம் என்றே கருதுகிறேன். இதனால் தேசிய அளவில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை வெளிப்படையாகத் தெரியவதற்கு சிறிது காலமாகலாம். ஆனால் “தவிர்க்க முடியாத” மூன்றாவது அலை நாடு முழுவதும் அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் தாக்கக் கூடும். இரண்டாவது அலையில் பாதிக்கபடாதவர்கள் மூன்றாவது அலையில் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

நாம் எவ்வாறு கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுகிறோம் என்பதை பொறுத்தே மூன்றாவது அலையின் தாக்கத்தின் பாதிப்புகள் இருக்கும் என்று கூறினார்.

மேலும் கூறியதாவது: “தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அனைத்தும் செயல்பாட்டுக்கு வரும்போது தொற்று பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டும். 5 சதவீதத்துக்கும் அதிகமான தொற்று பாதிப்பு உள்ள மாவட்டங்கள் குறைந்தபட்ச ஊரடங்கை செயல்படுத்த வேண்டும். நோய்த்தொற்று உள்ள பகுதிகளில் “பரிசோதனை, கண்காணிப்பு மற்றும் சிகிச்சைகள்” தொடர்ந்து பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த வேண்டும்.

கரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது என்று கூறிய குலேரியா, “முதல் அலையின் போது, ​​தொற்று அவ்வளவு வேகமாக பரவவில்லை. ஆனால் இரண்டாவது அலையின் போது உருமாறிய வைரஸ், மிக வேகமாக தீவிர தொற்றுநோயாக பரவி பல உயிரிழப்புகளை தந்தது.” “இப்போது மாறுபாடு அடைந்து பரவி வரும் டெல்டா வகைத் தொற்று மிக வேகமாக பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. “

“ஒரு புதிய அலை தாக்குவதற்கு வழக்கமாக மூன்று மாதங்கள் வரை ஆகலாம், ஆனால் இது பல்வேறு காரணிகளைப் பொறுத்து மிகக் குறைந்த காலத்தையும் எடுத்துக்கொள்ளக் கூடும்.” தடுப்பூசி போடாவிட்டால் அடுத்த சில மாதங்களில் மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள் என்று குலேரியா கூறினார்.

கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டு அளவுகளுக்கு இடையிலான இடைவெளியை இரட்டிப்பாக்குவது தொடர்பான சர்ச்சை குறித்த கேள்விக்கு, அறிவியலை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டுமே தவிர, பற்றாக்குறை அடிப்படையாக கொண்டதாக இருக்கக் கூடாது என்றார்.

அரசாங்கம் இடைவெளியை மறுபரிசீலனை செய்ய வேண்டுமா என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போது, “எதுவும் கல்லில் எழுதப்படவில்லை” என்று குலேரியா கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே