பாபர் மசூதி வழக்கில் வரும் 30 ஆம் தேதி தீர்ப்பு..!!

உத்தரப் பிரதேசம், அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடந்து வந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், வரும் 30-ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

தீர்ப்பு வழங்கப்படும் நாளின்போது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி எஸ்.கே.யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

அயோத்தியில் கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி நடந்த கரசேவை நிகழ்ச்சியின்போது பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

பாபர் மசூதியை இடிக்கத் தூண்டியதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, அப்போதைய உத்தரப் பிரதேச முதல்வர் கல்யாண்சிங், வினய் கத்தியார், விஹெச்வி தலைவர் அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர் உள்ளிட்ட 21 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

தலைவர்கள் மீது தனி வழக்கு, லட்சக்கணக்கான கரசேவகர்கள் மீது தனி வழக்கு என்று இரண்டு வழக்குகளாகப் பிரிக்கப்பட்டன.

தலைவர்கள் மீதான வழக்கு உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி நீதிமன்றத்திலும், கரசேவகர்கள் மீதான வழக்கு லக்னோவிலும் நடந்து வந்தது.

இதில், ரேபரேலி சிறப்பு நீதிமன்றம் அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

அடையாளம் தெரியாத கரசேவகர்கள் மீது தொடரப் பட்ட வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.

சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அலகாபாத் உயர் நீதிமன்றமும் கடந்த 2010-ம் ஆண்டு உறுதி செய்தது.

அத்வானி, ஜோஷி உள்ளிட்ட தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிஐ சார்பிலும், ஹாஜி மெஹபூப் அகமது என்பவர் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ் மற்றும் ரோஹின்டன் நாரிமன் அடங்கிய அமர்வு 2017, ஏப்ரல் 19-ம் தேதி தீர்ப்பு அளித்த தீர்ப்பில் மீண்டும் இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிட்டது.

இதன்படி சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக எஸ்.கே.யாதவ் நியமிக்கப்பட்டு, லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நாள்தோறும் விசாரணை நடந்து வந்தது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 32 பேரும் சிஆர்பிசி 313-ன் கீழ் நீதிபதி முன் காணொலி மூலம் வாக்குமூலம் அளித்தனர்.

இதில் கடந்த ஜூன் 24-ம் தேதி பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி காணொலி மூலம் வாக்குமூலம் அளித்தார்.

அதற்கு முந்தைய நாள் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி வாக்குமூலம் அளித்தார்.

இருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்தனர்.

இந்நிலையில் வழக்கில் இதுவரை 351 சாட்சியங்கள், 600 பக்க ஆவணங்களை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

வழக்கில் சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் லலித் சிங் பிடிஐ நிருபரிடம் கூறுகையில், ‘ பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைத்து வாதி, பிரதிவாதி தரப்பில் அனைத்து வாதங்களும் கடந்த 1-ம் தேதி முடிந்துவிட்டன.

நீதிபதி தீர்ப்பை எழுதும் பணியைத் தொடங்கிவிட்டார்.

வரும் 30-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது.

தீர்ப்பு வழங்கப்படும் அன்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் நேரில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்’ எனத் தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே