மும்பையில் செவ்வாய்கிழமை இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது. புதன் கிழமையும் இந்த மழை விடவில்லை. இதனால் மேற்கு மும்பையில் உள்ள மலாட் என்ற இடத்தில் நியு கலெக்டர் காம்பவுண்டில் குடியிருப்பு கட்டடம் ஒன்று இரவில் இடிந்து விழுந்துவிட்டது.
இது குறித்து உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு துறையினரும் போலீஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிந்து விழுந்த இக்கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 11 பேர் உடல்கள் மீட்கப்பட்டது. 7 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
உயிரிழந்தவர்களில் 7 பேர் குழந்தைகள் ஆவர். காலை வரை இடிபாடுகளில் யாரும் சிக்கியுள்ளனரா என்பது குறித்து தீயணைப்பு துறையினர் தேடிப்பார்த்தனர். இக்கட்டடம் இடிந்து விழுந்த போது அருகில் உள்ள கட்டடத்தின் மீது விழுந்ததில் அக்கட்டிடமும் தற்போது இடியும் நிலையில் இருக்கிறது.மீட்பு பணி
எனவே அதில் வசிப்பவர்கள் அக்கட்டடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர். சம்பவ இடத்திற்கு மாநில அமைச்சர் அஸ்லாம் ஷேக் வந்து நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், `மழை காரணமாக கட்டடம் இடிந்து விழுந்துள்ளது’ என்றார். இடிந்து விழுந்த கட்டடம் இரண்டு மாடிகள் கொண்டதாகும். இப்பகுதியில் அதிகமானோர் சட்டவிரோதமாக குடிசை வீட்டின் மீது இரண்டு அல்லது மூன்று மாடிகளை கட்டி விடுகின்றனர். இதனால் இது போன்று மழை நேரங்களில் இடிந்து விடுகிறது. ஏற்கனவே மாநில அரசு இடிந்து விழும் நிலையில் இருக்கும் கட்டடங்களில் இருந்து காலி செய்யும்படி மாநில அரசு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
மும்பையில் ஒரு நாள் பெய்த கனமழைக்கே மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது குறித்து பாஜக, மாநகராட்சியை குற்றம் சாட்டியிருக்கிறது. ஆனால் ரயில்வே நிர்வாகம் சரியாக சாக்கடையை தூர்வாரவில்லை என்று மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. நேற்று மழையால் மத்திய ரயில்வேயில் புறநகர் ரயில் சேவை 5 மணி நேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மும்பையில் இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.