மேற்குவங்கத்தில் 24.61%, அசாமில் 24.48% வாக்குகள் பதிவு..!!

மேற்குவங்க மாநிலத்தில் முதல்கட்டத் தேர்தல் நடக்கும் 30 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முதல் 3 மணிநேரத்தில் 15 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் ஒரேகட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அசாமில் மார்ச் 27 முதல் ஏப்ரல் 6 வரை 3 கட்டமாகவும் மேற்கு வங்கத்தில் மார்ச் 27 முதல் ஏப்ரல் 29 வரை 8 கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதன்படி அசாமில் 47 தொகுதிகளும் மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளும் என 77 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.

தற்போது கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தொடங்கியுள்ள நிலையில் வாக்காளர்கள் முகக் கவசம் அணிவது, கிருமி நாசினி வழங்கல், உடல் வெப்ப பரிசோதனை, சமூக இடைவெளி போன்ற கரோனா தடுப்பு விதிமுறைகள் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு பணியில் மாநில போலீஸாருடன் மத்தியப் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

அசாமில் காலை வாக்குப்பதிவு தொடங்கியதிலிருந்தே மக்கள் நீண்ட வரிசையில் ஆர்வத்துடன் வாக்களிக்கக் குவிந்துள்ளனர். இந்த தேர்தலில் காலை 10 மணி நிலவரப்படி அசாமில் 10.21 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

மேற்குவங்கத்திலும் ஜார்கிராம், மேற்கு மித்னாபூர் ஆகிய மாவட்டங்களில் வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் அதிகஅளவில் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர்.

மேற்கு வங்கத்தில் இன்று தேர்தலை சந்திக்கும் 30 தொகுதிகளும் ஒரு காலத்தில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் செலுத்தி வந்த ஜங்கல் மெஹல் பிராந்தியத்தில் உள்ளன. மேற்குவங்கத்தில் காலை 10.00 மணி நிலவரப்படி 15.30% வாக்குகள் பதிவாகியுள்ளன.

காலை 11 மணி நிலவரப்படி அசாமில் 24.48%, மேற்கு வங்கத்தில் 24.61% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே