உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 37 கோடி மதிப்பிலான 237 கிலோ தங்க நகைகளைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மாநிலம் முழுவதும் தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. உரிய ஆவணமின்றி பணம், நகைகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த வேன் ஒன்றை நிறுத்தி போலீசார் ஆய்வு மேற்கொண்டர்.
அதில் 37 கோடியே 57 லட்ச ரூபாய் மதிப்பிலான 237 கிலோ தங்கம் இருப்பதைப் பறக்கும் படையினர் கண்டுபிடித்தனர்.
மேலும், எவ்வித உரிய ஆவணமும் இன்றி அந்த நகைகள் எடுத்துச் செல்லப்படுவதும் தெரியவந்தது.
அந்தப் பகுதியில் உள்ள நகைக் கடைகளுக்கு விநியோகம் செய்யவே நகைகள் கொண்டு செல்லப்பட்டதாக வேனில் இருந்தவர்கள் கூறியுள்ளனர்.
இருப்பினும், அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் அதிகாரிகள் அந்த நகைகளைப் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்டுள்ள 37 கோடியே 57 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகள் சேலம் அரசுக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்த பின்னர், நகைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.