திரு.வி.க.நகர் தொகுதியில் கூட்டணி மற்றும் சின்னங்களின் பலத்தால், திமுக – தமாகா வேட்பாளர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.
பெரம்பூர் சட்டப்பேரவை தொகுதியில் இருந்து 4 பகுதிகள், புரசைவாக்கம் தொகுதியில் இருந்து 2 பகுதிகள், எழும்பூர் தொகுதியில் இருந்து 2 பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கி 2011-ம் ஆண்டு திரு.வி.க.நகர் (தனி) தொகுதி உருவாக்கப்பட்டது. கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி இத்தொகுதியில் 2,20,818 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள்- 1.07,090, பெண் வாக்காளர்கள்- 1,13,676, மற்றவர்கள் 52. இத்தொகுதியில் தற்போது 23 பேர் களத்தில் உள்ளனர்.
ஆடு தொட்டியால் ஏற்படும் சுகாதார சீர்கேடு, 40 ஆண்டுகள் பழமையான கழிவுநீர் குழாய்கள் மாற்றப்படாததால் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவது, புது திரு.வி.க.நகரில் பட்டா வழங்காதது, பல பகுதிகளில் கழிப்பிட வசதி இல்லாதது, குப்பைகளின் தலைநகரம் போல பல இடங்களில் குப்பைகள் காணப்படுவது என இத்தொகுதி மக்களின் குறைகள் நீள்கின்றன. இதனால் இத்தனை ஆண்டுகளாக பதவியில் இருக்கும் திராவிட கட்சிகளின்மீது இப்பகுதி மக்களிடையே வெறுப்பு காணப்படுகிறது.
இத்தொகுதியில் திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏவான சிவக்குமார் என்கிற தாயகம் கவி போட்டியிடுகிறார். தொகுதியின் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதாக கூறியும், திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளை எடுத்துக் கூறியும் இவர் வாக்கு சேகரித்து வருகிறார்.
தமாகா வேட்பாளர் பி.எல்.கல்யாணி, அதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ள அம்சங்களைச் சொல்லி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் டாக்டர் இளவஞ்சி, “வீட்டுக்கு ஒருவருக்கு வேலை, சுத்தமான குடிநீர், உலகத் தரம் வாய்ந்த கல்வி, புது திரு.வி.க.நகரில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எஸ்.ஓபேத், “ இத்தொகுதியில் குடிநீர் வசதி கிடையாது. கழிவுநீர், மழைநீர் வடிகால் கால்வாய்கள் சரிவர பராமரிக்கப்படவில்லை. சுகாதார சீர்கேட்டால் ஏற்படும் மக்கள் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பேன்” என்று வாக்குறுதி அளித்து வாக்கு சேகரிக்கிறார்.
அதிமுக, தமாகா வேட்பாளர்கள் தங்களது கூட்டணி பலத்தில் வெற்றிக் கனியைப் பறிக்கும் முயற்சியில் கடும் போட்டியில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில் திமுக, அதிமுக எம்எல்ஏக்களைப் பார்த்துவிட்ட இத்தொகுதி மக்களில் கணிசமான பேர் மாற்றத்தை விரும்புவதாகவும் கூறப்படுகிறது. அவர்களின் வாக்குகளை அறுவடை செய்ய தேமுதிக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.