மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசிகளை பெற்றுத்தாருங்கள் – வானதி சீனிவாசனுக்கு அமைச்சர் பதில்..!!

தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை பாஜக பெற்றுத் தர வேண்டுமென அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

சென்னை மாநகராட்சி மற்றும்  வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நடமாடும் மளிகைக் கடைகள் இன்று  வீடு வீடாக விற்பனையை தொடங்கின. கோயம்பேடு, கொத்தவால்சாவடியில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சுப்பிரமணியன், சேகர்பாபு, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஆகியோர்  கலந்துகொண்டு சேவையை தொடங்கி வைத்தனர்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இன்று முதல் நடமாடும் மளிகைக் கடைகள் செயல்பாட்டுக்கு வருகிறது, தமிழ்நாடு முழுவதிலும் நடமாடும் மளிகைக் கடைகள் சேவையை விரைவில் தொடங்க உள்ளோம் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், 83 லட்சம் தடுப்பூசிகள் இதுவரை மத்திய அரசிடம் இருந்து வந்துள்ளது என்றும், மத்திய தொகுப்பில் இருந்து முறையாக வரவேண்டிய தடுப்பூசிகளை, விரைந்து பெற்றுத்தர மாநில பாஜக தலைவர் முயற்சி எடுக்க வேண்டும் எனவும், தமிழ்நாட்டுக்கு கூடுதல் தடுப்பூசிகளை பெற்றுத்தர வேண்டியது பாஜகவின் கடமை என்றும் வலியுறுத்தினார். 

ஊரடங்கு கசப்பு மருந்தாக இருந்தாலும், மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். முழு ஊரடங்கு வெற்றியடைந்தால் தான், உயிரிழப்பு தடுக்கப்படும் என்ற அமைச்சர்,கோவை புறக்கணிக்கப்படுகிறதா என்ற வானதி சீனிவாசனின் கேள்விக்கும் பதிலளித்தார். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் தான் அதிக தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. செங்கல்பட்டு HLL தடுப்பூசி தயாரிப்பு மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர பாஜக தலைவர்கள் முயற்சிக்க வேண்டும் என்று அவர் கூறினார். 

மேலும், தடுப்பூசி முகாம்களில் திமுகவினரின் தலையீடு இல்லை.அப்படி யாரேனும் தலையிட்டால், முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று விவரித்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே