திரைத்துறையில் 18 ஆண்டுகள்: நெகிழ்ச்சியுடன் நன்றி சொன்ன அல்லு அர்ஜுன்

நடிகர் அல்லு அர்ஜுன் தான் நாயகனாக நடிக்க வந்து 18 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

இன்று தெலுங்குத் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் மகன். அல்லு அரவிந்தின் சகோதரி சுரேகா பிரபல நடிகர் சிரஞ்சீவியின் மனைவியாவார். அல்லு அர்ஜுனின் தாத்தா பிரபல நடிகர் அல்லு ராமலிங்கைய்யா. அல்லு அர்ஜுனின் சகோதரர் அல்லு சிரிஷும் தெலுங்குத் திரையுலகில் நடிகராக இருக்கிறார்.

இப்படிப் பெரிய திரையுலகப் பின்னணி இருக்கும் குடும்பத்திலிருந்து வரும் அல்லு அர்ஜுன் குழந்தை நட்சத்திரமாகச் சில படங்களில் நடித்திருந்தாலும், நாயகனாக அறிமுகமான படம் 2003ஆம் ஆண்டு மார்ச் 28 அன்று வெளியான ‘கங்கோத்ரி’. மூத்த இயக்குநர் ராகவேந்திர ராவ் இயக்கியிருந்த இந்தப் படத்தில் அதிதி அகர்வால் நாயகியாக நடித்திருந்தார்.

தற்போதைய சூழலில் தெலுங்கு சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராக அல்லு அர்ஜுன் இருக்கிறார். இவரது திரைப்படங்களுக்கு தெலுங்கு மட்டுமல்லாது தமிழகத்திலும், கேரளத்திலும் கூட நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அல்லு அர்ஜுனின் படங்கள் தொடர்ந்து மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகும் அளவுக்கு இவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் கேரளாவில் உள்ளது. இவரது நடனத்துக்கு தேசிய அளவில் ரசிகர்கள் உள்ளனர்.

இன்று (மார்ச் 28, 2021) திரையுலகில் தனது 18-வது ஆண்டை நிறைவு செய்கிறார். இதையொட்டி தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்துள்ள அல்லு அர்ஜுன், “எனது முதல் படம் வெளியாகி இன்றுடன் 18 ஆண்டுகள் ஆகின்றன. இந்த 18 வருடப் பயணத்தில் என்னுடன் பயணித்த ஒவ்வொருவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். எனது இதயம் நன்றியுணர்வால் நிறைந்துள்ளது. இவ்வளவு வருடங்களாக நீங்கள் காட்டி வரும் அன்பு உண்மையில் எனக்குப் பெரிய ஆசிர்வாதம். அத்தனை ஆசிர்வாதங்களுக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ‘புஷ்பா’ என்கிற படத்தில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் வில்லனாக ஃபகத் பாசில் நடிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே