17 கிலோ தங்கம் கையாடல் செய்யப்பட்டிருப்பதாக புகார்

வேலூர் மாவட்டம் சோளிங்கர் இல் அடகு வைக்கப்பட்ட நகைகளை திருப்பித் தராததால் வாடிக்கையாளர்கள் வங்கியை திறக்கவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டம் சோளிங்கரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகள் கையாடல் செய்யப்பட்ட இருப்பதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக வேலூர் மண்டல இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் சிவக்குமார் நடத்திய சோதனையில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான 17 கிலோ தங்கம் கையாடல் செய்யப்பட்டு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக வங்கியில் நகை மதிப்பீட்டாளர் பாபு மீது சோளிங்கர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் சோளிங்கரில் உள்ள தனியார் கோல்ட் லோன் நிறுவனத்தில் நகைகள் கையாடல் செய்யப்பட்ட வழக்கிலும் பாபுவுக்கு தொடர்பு இருப்பதால் அந்த வழக்கு சம்பந்தமாக நேற்று வேலூர் நடுவர் நீதிமன்றத்தில் பாபு சரணடைந்தார். இந்த இரண்டு வழக்குகளில் தொடர்புடைய பாபுவை சோளிங்கர் காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த வழக்கில் சோளிங்கரில் சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக வங்கியில் அடகு வைத்த நகைகளை வாடிக்கையாளர்கள் திருப்பி கேட்டு உள்ளனர். இதுவரை நகைகள் திருப்பி வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் வங்கியை திறக்கப்விடாமல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சென்ற காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே