சென்னை-ரஷ்யா இடையே கப்பல் போக்குவரத்து – மோடி, புடின் திட்டம்

பிரதமர் நரேந்திரமோடி ரஷ்ய  அதிபர் புடின் முன்னிலையில், பாதுகாப்பு, வர்த்தகம், விண்வெளி தொடர்பாக பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும் சென்னையிலிருந்து ரஷ்யாவின் விளாடிவாஸ்டாக் இடையே கப்பல் போக்குவரத்தை தொடங்குவதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சுமார் ஒரு கோடியே 70 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ரஷ்யாவின் கிழக்கு எல்லைப் பகுதியில் உள்ள மாகாணங்களின் வளர்ச்சிக்காக அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் விளாடிவாஸ்டாக் நகரில் கிழக்கத்திய பொருளாதார மாநாடு நாளை நடைபெறுகிறது.

ரஷ்ய அதிபரின் அழைப்பை ஏற்று, இந்த மாநாட்டின் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடி இரு நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். விளாடிவோஸ்டோக் நகரின் சர்வதேச விமான நிலையத்திற்கு காலையில் சென்றடைந்த மோடிக்கு, ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

ரஷ்யாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடியை ஆரவாரத்துடன் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும், பிரதமர் மோடியும், ஸ்வெஸ்டா (Zvezda) நகரில் உள்ள கப்பல் கட்டுமான வளாகத்தைப் பார்வையிடச் சென்றனர்.

கப்பலில் பயணித்த அவர்கள், ஸ்வெஸ்டா கப்பல் கட்டுமான வளாகத்தை பார்வையிட்டனர். மிகப் பெரிய போர்க்கப்பல்கள் உள்ளிட்டவற்றை கட்டும் திறன் பெற்ற அந்த வளாகத்தின் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி உரையாடினார்.

இதைத் தொடர்ந்து விளாடிவோஸ்டோக் நகரில் இரு நாட்டுத் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பேசிய மோடி, ரஷ்யாவின் அழைப்பு தனக்கு கிடைத்த மிகச்சிறந்த மரியாதை என்று கூறினார்.

ரஷ்யா நாட்டின் உயரிய அரசு விருதான புனித ஆண்ட்ரூ விருதை தனக்கு வழங்குவதாக அறிவித்து இருப்பது 130 கோடி இந்தியர்களுக்கும் கிடைத்த கவுரவம் என்று பிரதமர் தெரிவித்தார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன், எதுவானாலும் பேசத் தயங்கியதில்லை எனவும் மோடி நட்பு பாராட்டினார்.

இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து பாதுகாப்பு, விண்வெளி, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, அணு சக்தி தொடர்பு முனையங்கள், தொழில்துறை கூட்டு ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் 13 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உட்பட 25 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதில், ரஷ்யாவின் விளாடிவாஸ்டோக் நகரையும் சென்னையையும் நேரடியாக இணைக்கும் வகையில் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கான ஒப்பந்தமும் அடங்கும்.

சீனாவிற்கும், வட கொரியாவிற்கும் அருகே அமைந்துள்ள இந்த நகரம், பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள ரஷ்யாவின் மிகப் பெரிய துறைமுகத்தைக் கொண்ட நகரமாகும். கப்பல் போக்குவரத்தும், வணிக ரீதியான மீன்பிடிப்புமே இப்பகுதியின் 89 சதவீத பொருளாதார வாய்ப்பாக உள்ளது.

சீனா, கொரியா மட்டுமன்றி ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் இந்த துறைமுகம் வாயிலாக சரக்கு கப்பல் போக்குவரத்தை மேற்கொள்ள முடியும்.

ஒப்பந்தங்கள் கையெழுத்தானதைத் தொடர்ந்து பிரதமர் மோடியும், அதிபர் புடினும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, 2001 ஆம் ஆண்டு தாம் குஜராத் முதலமைச்சராக இருந்த போது, அதிபர் புடினைச் சந்தித்ததை நினைவு கூர்ந்தார்.

அரசு மற்றும் பொருளாதாரத் துறைகளில் இரு நாடுகளின் உறவு மேலும் வலுப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்திற்கு ரஷ்யா பயிற்சி அளிக்க உள்ளதை சுட்டிக் காட்டினார்.

ரஷ்யாவின் உதவியுடன் விண்வெளித்துறையில் இந்தியா புதிய உச்சத்தை எட்டும் என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே