வரும் கல்வியாண்டு முதல் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு 6 பாடங்களுக்கு பதிலாக ஐந்து பாடங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் மொழிப்பாடங்கள் உட்பட மொத்தம் 500 மதிப்பெண்களுக்கான மூன்று முதன்மை பாட தொகுப்புகளை 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு வரும் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் 600 மதிப்பெண்களுக்கான 4 முதன்மை பாடத்திட்டங்கள் அமலில் இருக்கும் என தெரிவித்துள்ள பள்ளி கல்வித்துறை, இத்திட்டத்தில் ஏதாவது ஒன்றை மாணவ மாணவிகள் தேர்வு செய்து கொள்ளலாம் எனக் கூறியுள்ளது.
பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள், தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம், ஆகிய பாடங்களையும், மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் கணிதம் தவிர்த்து பிற பாடங்களைப் படிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை 2020-2021 கல்வியாண்டு முதல் அமலுக்கு வரவுள்ளது.