புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு: OPS கண்டனம்

புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிந்த செயலுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர்-விழுப்புரம் சாலையில் எம்ஜிஆர் சிலை உள்ளது. இந்த சிலைக்கு இன்று காவித்துண்டு அணிவித்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், வையாபூரி மணிகண்டன் உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின், களைந்து சென்றனர். மேலும், இது தொடர்பாக அம்மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

அதில், தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் இதயதெய்வம் புரட்சித்தலைவர் மாண்புமிகு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு புதுச்சேரியில் மர்மநபர்கள் காவித்துண்டு அணிவித்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன் என தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, தலைவர்களின் சிலைகளை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க புதுச்சேரி அரசினை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என கடும் கண்டனம் தெரிவித்தார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே