முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தில் ஒளிந்து கிடக்கும் மர்மம் என்ன? மு.க.ஸ்டாலின் கேள்வி

வெளிநாட்டு பயணத்தில் ஒளிந்து கிடக்கின்றன மர்மங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர் அதிமுக ஆட்சியில் கடந்த 2015ஆம் ஆண்டிலும் கடந்த ஜனவரியிலும் என இரண்டு முறை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்ததை சுட்டிக்காட்டி உள்ளார். இந்த இரு மாநாடுகளிலும் போடப்பட்ட 402 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக வரப்போவதாகச் சொன்ன 5.42 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் தமிழகத்திற்கு ஏன் வரவில்லை என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த மாநாடுகளில் மூலம் முதலீடுகளை ஈர்க்க முடியாத ஒரு முதலமைச்சர் புதிய முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சுற்றுப் பயணம் போவது சரியா என்ற கேள்வி தமிழக மக்களுக்கு இருப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய தனிப்பட்ட வெளிநாட்டு பயணங்கள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மு க ஸ்டாலின் தனது வெளிநாட்டு பயணங்கள் அனைத்தும் வெளிப்படையானவை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த வெளிப்படையான பயணங்களை மர்மமான பயணங்கள் என குறிப்பிடும் எடப்பாடிபழனிசாமி தன்னுடைய வெளிநாட்டு பயணத்தில் ஒளிந்து கிடக்கின்றன மர்மங்களை தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே