நாடு முழுக்க கடன் வழங்கும் முகாம்கள் நடத்தத் திட்டம்

நாடு முழுவதும் 400 மாவட்டங்களில் கடன் வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுத்துறை வங்கிகள், என்.பி.எப்.சிகளுடனும் இணைந்து இதற்கான முகாம்களை நடத்தும் என்றார்.

சிறு கடன் பெறுவோர், வீட்டுக் கடன் மற்றும் விவசாய கடன் பெறுவோர் பயன் பெறும் வகையில் முகாம்கள் நடத்தப்படுமென அவர் குறிப்பிட்டார்.

இரண்டு கட்டமாக நடத்தப்படும் கடன் முகாம்களில் முதல் முகாம் 200 மாவட்டங்களில்  வருகிற 24-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், அடுத்த கட்ட முகாம் அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் வரும் நிலையில் அதிக பட்ச கடன் வழங்குவதை மேற்கொள்ள இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் இந்த முகாம்களின் போது விவசாயம், வீடு கட்டுதல், புதுப்பித்தல், சிறு கடன் உள்ளிட்ட பலவகை கடன்களும் வழங்கப்படுமென நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே