சீனாவுடன் விரைந்து வர்த்தக ஒப்பந்தம் எட்ட வேண்டிய அவசியம் இல்லை-டிரம்ப்

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து அமெரிக்கா, சீனா இரு நாடுகளும் வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ளன. 250 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான சீனப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை அமெரிக்கா 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

சீனாவும் 110 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதி மீது பதிலடி வரிகளை விதித்துள்ளது. அதேசமயம், இரு நாடுகளும் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டுள்ளன.

வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதன் மூலம் இந்த வரி விதிப்பு மோதலை முடிவுக்கு கொண்டுவர முடியும் என சீனா கருதுகிறது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்த டிரம்பிடம், அடுத்த அதிபர் தேர்தலுக்கு முன்னரே சீனாவுடன் ஒப்பந்தம் எட்டப்பட வேண்டும் என நினைக்கிறீர்களா?? என கேள்வி எழுப்பப்பட்டது.

அதிபர் தேர்தலுக்கு முன்னர் ஒப்பந்தம் எட்டப்பட வேண்டிய தேவை இல்லை என டிரம்ப் பதிலளித்தார்.

அமெரிக்காவில் இருந்து வேளாண் பொருட்களை சீனா வாங்கத் தொடங்கியிருப்பதாகவும், கடந்த வாரத்தை எடுத்துக் கொண்டால் பெருமளவில் கொள்முதல் நடைபெற்றிருப்பதாகவும் கூறிய டிரம்ப், ஆனால் தாம் எதிர்பார்ப்பது இதுவல்ல என தெரிவித்தார்.

சீனாவுடன் முழுமையான ஒப்பந்தம் எட்டப்பட வேண்டும் என நினைப்பதாகவும், அரைகுறை ஒப்பந்தம் தேவை இல்லை என்றும் அமெரிக்க அதிபர் குறிப்பிட்டார்.

தமது கொள்கைகளால், வரிகளின் வடிவில் சீனா பில்லியன் கணக்கான டாலர்களை அமெரிக்காவிற்கு செலுத்துவதாகவும், நாணய மதிப்பிறக்கம் செய்ததன் மூலம் சீனாவின் பொருளாதாரம் மோசமான நிலையை அடைந்திருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.

சீனாவின் பொருளாதார நிலை மோசமடைவதை தான் விரும்பவில்லை என்றாலும், 57 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனப் பொருளாதாரம் மோசமடைந்திருப்பதாக அவர் கூறினார்.

சீனாவின் விநியோகச் சங்கிலி முற்றாக சிதைந்திருப்பதாகவும், 25 சதவீத வரி செலுத்த முடியாது என்பதால் அங்கிருந்து நிறுவனங்கள் வெளியேறுவதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

விரைவில் 250 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான சீனப் பொருட்கள் மீதான வரி விகிதத்தை, 25 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்த இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் கூறினார்.

சீனாவுடன் விரைவாக ஒப்பந்தம் எட்ட முடியும் என்றாலும், அது முறையான ஒப்பந்தமாக இருக்காது என்றும், அறிவுசார் சொத்துரிமைகள் காப்புடன் கூடிய சரியான ஒப்பந்தம்தான் எட்டப்பட வேண்டும் என்றும் டிரம்ப் கூறினார்.

வர்த்தக ஒப்பந்தங்கள் நியாயமாக இருக்க வேண்டியது அவசியம் என அப்போது ஆமோதித்த  ஆஸ்திரேலிய பிரதமர், அறிவுசார் சொத்துரிமைக்கு காப்பு உள்ளிட்டவை அவசியம் என தெரிவித்தார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே