நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து, முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆலோசனை

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினரிடம் விருப்ப மனு பெறப்பட்டு நேற்று நேர்காணல் நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அவை தலைவர் மதுசூதனன், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்கள் கேபி முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் அதிமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் இடைத்தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

முழுவீச்சில் தேர்தல் பணியில் ஈடுபடவேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, தமிழக அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்று சேர்ந்துள்ளதால், இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இதற்கிடையே, தேர்தல் பணிக்காக அதிமுகவின் 52 மாவட்ட நிர்வாகிகளில் 16 மாவட்ட நிர்வாகிகள் விக்கிரவாண்டி தொகுதிக்கும், 14 மாவட்ட நிர்வாகிகள் நாங்குநேரி தொகுதிக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே