நாங்குநேரி இடைத்தேர்தல் : 24 வேட்பாளர்களின் மனு ஏற்பு, 22 மனுக்கள் தள்ளுபடி

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 24 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 22 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 23ம் தேதி துவங்கியது.

கடைசி நாளான நேற்று காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் மற்றும் சுயேச்சைகள் உட்பட 37 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இதையடுத்து வேட்புமனு பரிசீலனை நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பொது பார்வையாளர் விஜயசுனிதா முன்னிலையில் இன்று நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், அதிமுக வேட்பாளர் நாராயணன் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜ் நாராயணன் பனங்காட்டு படை கட்சி வேட்பாளர் ஹரி நாடார் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பங்கேற்றனர்.

இதில் அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர் உள்ளிட்ட 24 பேருக்கு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நாளை மறுநாள் மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர் நடேசன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தேர்தல் விதிமீறல் தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை என்றார்.

புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் என பதினோரு வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே