திரையரங்கு டிக்கெட் கட்டணத்தை விற்பனை செய்ய அரசு முடிவு!!

திரையரங்குக் கட்டணத்தை செயலி மூலம் அரசே விற்பனை செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம், செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வருகிறது.

திரையங்குகளுக்கான டிக்கெட் கட்டணத்தை அரசு நிர்ணயித்துள்ள போதும், அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்கப்படுவதாக அவ்வப்போது புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இது தவிர, இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது சேவைக் கட்டணம் அதிக அளவில் வசூலிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தப் பிரச்சனைகளைக் களைவதற்காக, திரையரங்க டிக்கெட்டுகளை அரசே விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்து இருந்தார்.

இதற்காக தனி செயலியை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறி இருந்தார். இதுதொடர்பாக ஏற்கெனவே ஒரு முறை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடம்பூர் ராஜூ தலைமையில், தலைமைச் செயலகத்தில் இரண்டாவதுமுறையாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆகியோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

கட்டணம் வசூலித்தல், செயலி உருவாக்குதல் தொடர்பாக இதில் விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே