தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம்

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் விவரங்களை திருத்துவதற்கான சிறப்பு திட்டம் இன்று முதல் வருகிற 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

வாக்காளர் பட்டியலின் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக தேர்தல் ஆணையம் இன்று முதல் 30- ஆம் தேதி வரை வாக்காளர் சரிப்பார்ப்பு திட்டம் என்ற புதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்தி உள்ளது.

வாக்காளர் பட்டியலில் உள்ள தங்களது பெயர், பிறந்த தேதி, வயது உள்ளிட்ட பதிவுகளை வாக்காளர்களே சரிபார்த்துக்கொள்ளவும், திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் அவைகளை மேற்கொள்ளவும் எளிய வசதியில் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாற்று திறனாளிகள், இலவச தொலைபேசி எண் 1950- இல் தொடர்பு கொண்டு திருத்தங்கள் செய்யலாம் எனவும், மற்றவர்கள் செல்போன் செயலி மற்றும் இணையதளம் வழியே மாற்றங்கள் செய்யலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கணினி மற்றும் செல்போன் இல்லாதவர்கள், பொது சேவை மையம் மற்றும் வாக்காளர் சேவை மையங்களுக்கு நேரடியாக சென்று மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்ட விவரங்கள் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வாயிலாக கள ஆய்வு செய்யப்பட்டு அக்டோபர் 15-ஆம் தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும், வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக நவம்பர் 2, 3, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் வாக்கு சாவடிகளில் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே