டன் கணக்கில் கைப்பற்றப்பட்ட வெண்ணெய் தரமற்றது

சென்னை சைதாபேட்டையில் டன் கணக்கில் கைப்பற்றப்பட்ட வெண்ணெய், தரமற்றது என்பதை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

சென்னை சைதாப்பேட்டையில், ஊத்துக்குளி என்ற பெயரில் தரமற்ற முறையில் வெண்ணெய் மற்றும் நெய் தயாரிக்கப்பட்டு விற்கப்படுவதாகவும், கோவில்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.

இதை அடுத்து கடந்த மாதம் 16ஆம் தேதி அன்று சைதாப்பேட்டையில் உள்ள 5க்கும் மேற்பட்ட வீடுகளில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது 3 டன் வெண்ணெய் மற்றும் நெய் பறிமுதல் செய்யப்பட்டது. மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு தஞ்சையில் உள்ள ஆய்வக கூடத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்த ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.

அதன்படி, கைப்பற்றப்பட்ட வெண்ணெய் மற்றும் நெய் அனைத்தும் தாவர கொழுப்பு மற்றும் ரசாயனம் சேர்க்கப்பட்டு தரமற்ற வகையில் தயாரிக்கப்பட்டது என்பது உறுதியாகியுள்ளது.

எனவே, தரமற்ற வெண்ணெய் மற்றும் நெய் தயாரித்த 4 பேர் மீது உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டம் 2006 பிரிவுகள் 52,57,59ன் படி, வழக்கு தொடர உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே