அளவுக்கதிகமாகவும் கட்டிகளாகவும் வெளியேறும் ப்ளீடிங்… பிரச்சனையின் அறிகுறியா..??

ஒவ்வொரு மாதமும் பீரியட்ஸின்போது அதிகளவு ப்ளீடிங் ஆகிறது. தவிர ப்ளீடிங்கானது கட்டிகளாகவும் வெளியேறுகிறது.

இதற்கு என்ன காரணம்? சிகிச்சைகள் உண்டா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.

 மகப்பேறு மருத்துவர் ஜெயராணி

மாதவிலக்கின்போது கர்ப்பப்பையின் உள் லேயரானது சுருங்கி, உதிர்ந்து வரும்போது அதிலுள்ள ஹீமோலைசின் எனப்படும் அமினோ அமிலமானது ரத்தத்தை உறையவிடாமல் ரத்தமாகவே வைத்திருக்கும். அதனால்தான் ரத்தப்போக்கு கட்டிகளின்றி வெளியேறும்.

சில நேரங்களில் இந்த லைசீன் செயல்பாடு சீராக இல்லாமல் போகும்போதும், ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும்போதும், வெளியேறும் ரத்தமானது கட்டிகளாக வெளியேறலாம்.

இவை தவிர கர்ப்பப்பையின் அளவு பெரியதாக இருந்தாலோ, கர்ப்பப்பையின் உள்சுவரான எண்டோமெட்ரியம் அடர்த்தியாக இருந்தாலோ, பிசிஓடி பாதிப்பு இருந்தாலோ, ஹார்மோன் குறைபாடுகள் இருந்தாலோ அளவுக்கதிக ரத்தப்போக்கு ஏற்படலாம்.

சில பெண்களுக்கு ‘எண்டோமெட்ரியல் ஹைப்பர்ப்ளேசியா’ (endometrial hyperplasia) என்கிற பாதிப்பு இருக்கலாம். அதாவது கர்ப்பப்பையின் உள் லேயரானது அதிக அடர்த்தியாக இருந்து, அது உதிர்ந்து வெளியே வர அதிக நாள்கள் எடுத்துக்கொள்ளலாம். அதனாலும் ரத்தப் போக்கு அதிகமாகவும் கட்டிகளாகவும் வெளியேறலாம்.

கர்ப்பப்பையில் ஃபைப்ராய்ட்ஸ் எனப்படும் கட்டிகள் இருந்தாலும் ப்ளீடிங் அதிகரிக்கலாம். எனவே முதலில் அதிக ப்ளீடிங் ஆவதற்கான காரணங்களை முறையான மருத்துவப் பரிசோதனையின் மூலம் கண்டறிந்து சரியான சிகிச்சைகளை எடுக்க வேண்டும்.

மாதவிடாய்

இந்தப் பிரச்னைகளை வெறும் ஸ்கேன் மூலம் கண்டுபிடிக்க முடியாது. ஹார்மோன் டெஸ்ட்டுகளும், சிலருக்கு மருத்துவமனையில் ஒருநாள் தங்கவைத்துச் செய்யப்படுகிற பரிசோதனைகளும் தேவைப்படலாம்.

பீரியட்ஸின்போது நீங்கள் உபயோகிக்கிற நாப்கின்களின் எண்ணிக்கை, உங்களுக்கு இரும்புச்சத்து மற்றும் கால்சியம் தேவை உள்ளதா என்பதையெல்லாம் மருத்துவர்கள் பார்த்து அதற்கேற்ப சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார்கள். அதன் மூலம் உங்களுக்கு அனீமியா எனப்படும் ரத்தச்சோகை வராமல் தடுப்பதுடன், மீண்டும் மீண்டும் அதிக ப்ளீடிங் மற்றும் கட்டிகளாக வெளியேறும் பாதிப்பு தொடராமலும் பார்த்துக் கொள்வார்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே