தீவிரவாதத்தின் மையமாக விளங்குகிறது பாகிஸ்தான்

தீவிரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் விளங்குவதாக ஐநா மனித உரிமை ஆணைய கூட்டத்தில் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் இந்திய மாநிலம் என்று பாகிஸ்தான் தரப்பில் முதன்முறையாக தெரிவிக்கப்பட்டுள்ளது

42வது ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டம் ஜெனீவா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுப் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேசி காஷ்மீரில் முக்கிய தலைவர்கள் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

இந்தியா சார்பில் கூட்டத்தில் பங்கேற்றுள்ள இந்திய வெளியுறவுத்துறையின் கிழக்கு பகுதி செயலாளர் விஜய்தாக்கூர் சிங், பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்தார்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய  370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது முற்றிலும் இந்திய விவகாரம் என்று விஜய்தாக்கூர் சிங் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் தலையிட எந்த நாட்டுக்கும் உரிமை இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார். காஷ்மீரில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் 90 சதவீதம் குறைக்கப்பட்டு தற்போது அமைதி நிலவுவதாக அவர் குறிப்பிட்டார். தீவிரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் இருப்பதாகவும்  அவர் சாடினார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேசி, ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு மாநிலம் என்றார்.

இதுவரை காஷ்மீரை சர்ச்சைக்கு உரிய நிலம் என்று பாகிஸ்தான் கூறி வந்த நிலையில் குரேசி, காஷ்மீரை இந்திய மாநிலம் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அஸ்ஸாமில் நடைபெற்ற தேசிய மக்கள் பதிவேடு கணக்கெடுப்பில் 19 லட்சம் பேருக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது குறித்து ஐநா.மனித உரிமை ஆணையர் மிச்செல் பாச்லெட் தெரிவித்த கருத்துக்கும் பதில் அளித்த இந்திய வெளியுறவுச் செயலர் விஜய்தாக்கூர் சிங், உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் மிகவும் வெளிப்படையாக நடைபெற்று வரும் சட்டரீதியான கணக்கெடுப்பு அது என்று தெரிவித்தார்.

இந்தியாவின் ஜனநாயக மரபு மற்றும் சட்டத்திற்குட்பட்டே இந்த பதிவேடு செயல்படும் என்றும் இந்தியா சார்பில் ஐநா.மனித உரிமைக்குழுவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே