சவுதி அரேபியாவில், எண்ணெய் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தம்

சவுதி அரேபியாவில், தாக்குதலுக்குள்ளான இரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் எண்ணெய் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரியாத்திலிருந்து 330 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புக்கியாக் மற்றும் குரைஸ் பகுதிகளில் அரம்கோ நிறுவனத்தின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன.

இந்த ஆலைகளை குறிவைத்து நேற்று தீவிரவாதிகள் டிரோன் கொண்டு தாக்குதல் நடத்தியதில், ஆலைகள் தீப்பற்றி எரிந்தன. இந்த தீயை உடனடியாக அணைத்துவிட்டதாக சவுதி அரேபியா அரசு தெரிவித்தாலும், ஆலைகளிலிருந்து கரும்புகை வெளியேறி வருகிறது.

இந்த தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என குற்றஞ்சாட்டியுள்ள அமெரிக்கா, ஏமனிலுள்ள போராளிகளுக்கு ஆயுதங்களை சப்ளை செய்து ஈரான்ஆதரவளிப்பதாக குற்றஞ்சாட்டியிருந்தது.

இந்நிலையில், கச்சா எண்ணெயை சுத்திகரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்த ஆலைகளில் தற்காலிகமாக பணி நிறுத்தப்பட்டுள்ளதாக, அந்நாட்டின் எரிசக்தித்துறை அமைச்சர் அப்துலாசிஸ் பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையிலும், ஆலைகள் சேதப்பட்டதால் 50 சதவீதம் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக நாளொன்றுக்கு சுமார் 57 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, சேதமடைந்த ஆலைகளில் அடுத்த இரு நாட்களில் மீண்டும் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டு, நடவடிக்கை எடுத்து வருவதாக அரம்கோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நசீர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே