காஷ்மீரில் தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் சுமார் 273 தீவிரவாதிகள் ஊடுருவல்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் சுமார் 273 தீவிரவாதிகள் அங்கு ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்பட்டு அம்மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

இந்தியாவின் இந்த நடவடிக்கையால் விரக்தியடைந்த பாகிஸ்தான், ஜம்மு – காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்கவும், வன்முறையை கட்டவிழ்த்து விடவும் தீவிரமாக முயன்று வருகிறது.

இந்நிலையில் இதே நோக்கத்துடன் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் மட்டும் சுமார் 273 தீவிரவாதிகள் நடமாடிவருவதாக, உளவுத்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன.

அவர்களில் 166 பேர் உள்ளூர்காரர்கள் எனவும், 107 பேர் வெளிநாட்டினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 112 பேர் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பினர் எனவும், 100 பேர் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது.

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் 59 தீவிரவாதிகளும், அல்-பதார் அமைப்பின் 3 தீவிரவாதிகளும் அடங்குவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் காஷ்மீர் பகுதியில் மிகப்பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் உளவுத்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன.

எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டி சுமார் 30 ஏவுதளங்களை பாகிஸ்தான் அமைத்திருப்பதாகவும், அங்கிருந்து தீவிரவாதிகள் மூலம் காஷ்மீரில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கடந்த 11ம் தேதி ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே