கால்டாக்சி ஓட்டுநர் கொலை வழக்கில் தேடப்படும் பெண்ணின் புகைப்படங்கள் வெளியீடு

சென்னை அசோக்நகரைச் சேர்ந்தவர் நாகநாதன். கால்டாக்சி ஓட்டுநராக இருந்தார். இவர் ஓட்டுநராக இருந்த கால் டாக்சியை கடந்த 6-ஆம் தேதி வாடகைகு எடுத்த கும்பல் குற்றாலத்துக்குச் செல்ல வேண்டும் என்று கூறி அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி கால் டாக்சி உரிமையாளரை தொடர்பு கொண்ட நாகநாதன், மறுநாள் பணி முடிந்து திரும்பிவிடுவதாகத் தெரிவித்த நிலையில், கூறியபடி திரும்பவில்லை. இதையடுத்து கால்டாக்சி உரிமையாளர் நாகநாதனை செல்ஃபோனில் தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக சென்னை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில் சாலையோரம் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது. விசாரணையில் அது கால்டாக்சி ஓட்டுநர் நாகநாதனின் சடலம் என தெரியவந்தது. இதையடுத்து கால்டாக்சியை வாடகைக்கு எடுத்த கும்பல், ஓட்டுநர் நாகநாதனை கொலை செய்து விட்டு காரை எடுத்துச் சென்றிருக்கக் கூடும் என்ற கோணத்தில் சென்னை மற்றும் மதுரை போலீசார் இணைந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் காரை வாடகைக்கு எடுத்துச் சென்ற கும்பல் திருச்சி வழியாகச் சென்ற நிலையில் திருச்சியில் ஓட்டுநர் நாகநாதன் சாலையைக் கடக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.

மேலும் போலீசார் அந்தக் கும்பலைச் சேர்ந்த பெண்ணான திருச்சியைச் சேர்ந்த ஜெயசுதாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் அவர்கள் அங்கிருந்து சென்றிருக்க வாய்ப்புள்ள இடங்கள் அதன் அடிப்படையில் அவர்களது வேறு சி.சி.டி.வி. காட்சிகள் கிடைப்பதற்கான வாய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையிலும் ஜெயசுதாவின் புகைப்படத்தைக் கொண்டும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் மதுரையில் வாடகைக்காரை பதிவு செய்து ஓட்டுநரைக் கொன்று கடத்தியது தொடர்பான மேலும் இரு வழக்குகள் உள்ளதாகவும், இந்தக் கும்பலுக்கும் அதற்கும் தொடர்பு உள்ளதா?? என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே