உடனே சாஹல் கேமராவைப் பார்த்து, ‘இவர் அணுகுமுறையைப் பார்த்தீர்களா?’ என்று கேட்டு சிரிக்க இஷான் கிஷனும் சேர்ந்து சிரித்தார்.
இஷான் கிஷன் நேற்று அறிமுகப் போட்டியில் பெரிய இன்னிங்சை ஆடி கனவு அறிமுகப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதைத் தட்டி சென்றார், ஆனால் தனக்கு அரைசதம் அடித்தது தெரியாது என்றும் விராட் கோலிதான் தன் மட்டையை உயர்த்தச் சொன்னார் என்றும் சாஹலிடம் அவர் தெரிவித்துள்ளார்.
இஷான் கிஷன் நேற்று 32 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து அசத்தினார், ரஷீத்தை அடுத்தடுத்து சிக்சர்கள், டாம் கரணை வந்தவுடன் லாங் ஆனில் சிக்ஸ் அடித்து குட் ஈவினிங் டாம் கரன் என்றது, ஆர்ச்சர் பந்தை ஸ்கொயர் லெக் பவுண்டரிக்கு விரட்டியது என்று அச்சமற்ற கிரிக்கெட்டை வெளிப்படுத்தியது பரவலான பாராட்டுகளை அவர் மீது குவித்துள்ளது.
ராகுல் மீண்டும் சொதப்பி டக் அவுட் ஆக, கோலியும் இஷான் கிஷனும் சேர்ந்து 94 ரன்களை 10 ஓவர்களில் சேர்த்து இங்கிலாந்திடமிருந்து வெகுதூரம் ஆட்டத்தைக் கொண்டு சென்றனர்.
இந்நிலையில் தன் அரைசதம் குறித்து இஷான் கிஷன் சாஹல் டிவியில் அவரிடம் கூறியதாவது, அதாவது சாஹல் அவரை பேட்டி காணும்போது ஏன் அரைசதம் அடித்தவுடன் மட்டையை உயர்த்தாமல் சற்றே தாமதித்து உயர்த்தினாய் என்று கேட்க அதற்கு இஷான் கிஷன், “நான் உள்ளபடியே கூற வேண்டுமெனில் பதற்றமாக இருந்தேன். நான் அரைசதம் எட்டிவிட்டேன் என்பதையே உணரவில்லை.
விராட் கோலி அப்போது என்னிடம் வந்து டாப் இன்னிங்ஸ் என்றார். அப்போதுதான் அரைசதம் எடுத்து விட்டதை உணர்ந்தேன். பொதுவாக நான் அரைசதம் எடுத்தால் பேட்டை உயர்த்த மாட்டேன். நான் எப்போதாவதுதான் அரைசதத்தைக் கொண்டாட மட்டையை உயர்த்துவேன்” என்றார்.
உடனே சாஹல் கேமராவைப் பார்த்து, ‘இவர் அணுகுமுறையைப் பார்த்தீர்களா?’ என்று கேட்டு சிரிக்க இஷான் கிஷனும் சேர்ந்து சிரித்தார்.
டாப் இன்னிங்ஸ் என்று கூறியதோடு இஷான் கிஷனிடம் கோலி மட்டையை உயர்த்து ராஜா என்று சொல்லியுள்ளார். ’ரசிகர்களிடம் மட்டையை உயர்த்தி அனைவரும் பார்க்குமாறு செய்’ என்று கோலி அறிவுறுத்தியதையும் இஷான் கிஷன் சாஹலிடம் தெரிவித்தார்.
முதல் டி20 போட்டியை இழந்த இந்தியா, 2வது போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை 1-1 என்று சமன் செய்தது.