பற்கள் சரியில்லை : மனைவிக்கு முத்தலாக் அளித்த கணவர்

மனைவியின் பற்கள் சரியில்லை என்று கூறி முத்தலாக் அளித்துள்ளார் கணவர். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் பின்னணி பற்றி தற்போது பார்க்கலாம்.

ஐதராபாத்தை சேர்ந்த முஸ்தபா என்பவருக்கும், ருக்சானா பேகம் என்பவருக்கும் கடந்த 2019 ஜூன் 27 அன்று திருமணம் நடந்தது.

இந்நிலையில் பல் வரிசை சரியில்லை, எத்துப்பல் எனக்கூறி முஸ்தபா முத்தலாக் செய்துவிட்டதாக, ருக்சானா பேகம் ஐதராபாத் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக ருக்சானா கூறுகையில், திருமணத்தின் போது, முஸ்தபா மற்றும் அவரது குடும்பத்தினர் நிறைய வரதட்சணை எதிர்பார்த்தனர்.

அனைத்தையும் எனது குடும்பத்தினர் நிறைவேற்றினர். திருமணத்திற்கு பிறகு, கணவரும், அவரது பெற்றோர், உடன் பிறந்தவர்கள் என்னை துன்புறுத்தினர்.

எனது பெற்றோரிடம் நிறைய பணம் மற்றும் நகை வாங்கி வர கூறினர். எனது சகோதரரின் இரு சக்கர வாகனத்தையும் முஸ்தபா வாங்கி கொண்டார். தொடர்ச்சியாக என்னை அவர்கள் துன்புறுத்தினர்.

எனது பல் வரிசை சரியில்லை எனக்கூறும் முஸ்தபா, என்னுடன் வாழ பிடிக்கவில்லை எனவும் கூறினார்.

என்னை அவர்களது வீட்டில் 10 முதல் 15 நாட்கள் வரை அடைத்து வைத்தனர். எனது உடல்நிலை பாதிக்கப்பட்டதால், பெற்றோரிடம் அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக உள்ளூர் போலீசாரிடம் புகார் அளித்தேன். இதனையடுத்து முஸ்தபாவும், அவரது பெற்றோரும் என்னிடம் சமரசமாக செல்வதாக கூறினார். மீண்டும் வீட்டிற்கு அழைத்துக் கொள்வதாக கூறினர்.

ஆனால் கடந்த அக்., 1ம் தேதி எனது பெற்றோர் வீட்டிற்கு வந்த முஸ்தபா, என்னுடன் மீண்டும் வாழ முடியாது எனக்கூறியதுடன், எனது பெற்றோரையும் மோசமான வார்த்தைகளில் திட்டி, முத்தலாக் கூறினார்.

பின்னர், தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதும், முத்தலாக் கூறினார்.

இதனால், கடந்த அக்.,26ல் கணவர் மற்றும் அவரது பெற்றோர் மீது மீண்டும் போலீசில் புகார் அளித்தேன்.

முத்தலாக் கூறியதற்காகவும், வரதட்சணை கேட்டதற்காகவும் புகார் அளித்துள்ளேன். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனக்கு நீதி வேண்டும் என்றார்.

இது குறித்து முஸ்தபா மீது வரதட்சணை தடுப்புச் சட்டம் மற்றும் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே