அணைகளை தூர்வாருவது தங்கள் பணி இல்லை – மத்திய அரசு

கொள்ளளவு பரப்பை அதிகரிக்கும் நோக்கில் அணைகளை தூர் வாருவது தங்களின் பணி அல்ல என்று தேசிய நீர் மேம்பாட்டு அமைப்பு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

ஆழியாறு அமராவதி பவானிசாகர் கொல்லணை கொடிவேரி கிருஷ்ணகிரி போன்ற அணைகளை உடனடியாக தூர்வாரி நீர் கொள்ளும் பரப்பைப் மேம்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் மனுதாக்கல் செய்து இருந்தார். அணைகளை தூர்வாரவும், பராமரிக்கவும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் 11 அணைகளையும் தூர் வார உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார். இதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து கண்மாய்கள், குளங்களையும் தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றி பராமரிக்க வேண்டும் என்றும் அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்யநாராயணன் புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய நீர் மேம்பாட்டு அமைப்பு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கொள்ளளவு பரப்பை அதிகரிக்கும் நோக்கில் அணைகளை தூர் வாருவது தங்களின் பணி அல்ல என்றும் இதனை அந்தந்த மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆகவே இந்த வழக்கிற்கு தேவையான எதிர்மனுதாரர் தாங்கள் அல்ல என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதனை அடுத்து நீதிபதிகள் வழக்கை அக்டோபர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே