வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது மத்திய அரசு

விலையேற்றம் மற்றும் தட்டுப்பாட்டை சமாளிக்கும் பொருட்டு, வெங்காய ஏற்றுமதி தடை விதித்துள்ள மத்திய அரசு, மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லரை வியாபாரிகள் கையிருப்பில் வைக்கும் வெங்காயத்தின் அளவுக்கும் கட்டுப்பாடு விதித்துள்ளது. 

மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம், குஜராத், பீகார், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வெங்காயம் அதிகம் விளைகிறது. அண்மைக் காலமாக அந்த மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டது.

இதனால் வெங்காய வரத்து கணிசமாகக் குறைந்து போகவே விலையேறத் தொடங்கியது.

தமிழகத்தில் ஒரு கிலோ வெங்காயம் 60 ரூபாய் தொடங்கி 80 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

அன்றாடம் சமையலில் இன்றியமையாத வெங்காயத்தின் விலை 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்ததால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அவதியுற்று வருகின்றனர்.

விலையேற்றத்தை சமாளிக்கும் பொருட்டு மத்திய மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

தமிழகத்தில், 3 நாட்களுக்கு மட்டுமே தாக்குப்பிடிக்கக் கூடிய ஆந்திர வெங்காயம் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்த விலையில் விற்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வெங்காயத் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில், அதன் ஏற்றுமதி சார்ந்த கொள்கையில் மத்திய வர்த்தக அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது.

அதன்படி அனைத்து வகையான வெங்காய ஏற்றுமதிக்கும் தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதிக்கான தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும், மறு உத்தரவு வரும் வரை தடை அமலில் இருக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதேபோல், மொத்த வியாபாரிகள் கையிருப்பில் வைக்கும் வெங்காயத்தின் அளவு 50 ஆயிரம் கிலோவுக்கு மிகாமலும், சில்லரை வியாபாரிகள் கையிருப்பில் வைக்கும் வெங்காயத்தின் அளவு 10 ஆயிரம் கிலோவுக்கு மிகாமலும் இருக்க வேண்டுமென்றும், இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே