விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும்போது சிக்னல் துண்டிப்பு..!

சந்திரயான் 2 திட்டத்தின், லேண்டர் விக்ரம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும்போது 2.1 கிலோமீட்டர் உயரத்தில் சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து ஆராயப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ள நிலையில், லேண்டர் விக்ரம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதா இல்லையா என்பது, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகே தெரியவரும்.

978 கோடி ரூபாய் செலவில் தயாரான சந்திரயான்-2, 3,850 கிலோ எடை கொண்டதாகும். நிலவை சுற்றிவரும் ஆர்பிட்டர், நிலவில் தரையிறங்கும் லேண்டர் விக்ரம் மற்றும் ஆய்வூர்தி பிரக்யான் ஆகிய 3 அங்கங்களை உள்ளடக்கியது.

கடந்த ஜூலை 22-ம் தேதி, பிற்பகல் 2.43 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. 

பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சந்திரயான் 2 வெற்றிகரமாக செலுத்தப்பட்டு, அதன் சுற்றுப்பாதை நிலவுக்கு நெருக்கமாக அமையும் வகையில் படிப்படியாக குறைக்கப்பட்டது. செப்டம்பர் 2ஆம் தேதி பகல் 12.45 மணியில் இருந்து 1.45 மணிக்குள் சந்திராயன் 2 ஆர்பிட்டரில் இருந்து வெற்றிகரமாக, ஆய்வூர்தி பிரக்யானுடன் லேண்டர் விக்ரம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது.

திட்டமிட்டபடி செப்.2 ஆம் தேதி ஆர்பிட்டரிலிருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து நிலவை நோக்கி நீள்வட்டப் பாதையில் சுற்றத் தொடங்கியது. நிலவில் இருந்து அதிகபட்சம் 128 கிலோமீட்டர், குறைந்தபட்சம் 114 கிலோமீட்டர் தொலைவு என்ற சுற்றுப்பாதையில் லேண்டர் விக்ரம் பிரிக்கப்பட்டது. இதன் பிறகு, பிரக்யானுடன் கூடிய லேண்டர் விக்ரமின் சுற்றுப்பாதை, அதிகபட்சம் 100 கிலோமீட்டர், குறைந்தபட்சம் 30 கிலோமீட்டர் என மாற்றப்பட்டு சுற்றியது.

இந்நிலையில், இன்று அதிகாலை 1.40 மணிக்கு, 30 கிலோமீட்டர் உயரத்தில் இருந்தபோது, லேண்டர் விக்ரம் சுற்றுவது நிறுத்தப்பட்டு, நிலவை நோக்கி தரையிறக்கும் பணி தொடங்கியது. இதை விஞ்ஞானிகளுடன் காண்பதற்காக, பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு பிரதமர் மோடியும் வந்திருந்தார். படிப்படியாக திட்டமிட்டபடி வெற்றிகரமாக லேண்டர் விக்ரம் இறங்கிய நிலையில், அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

நிலவின் தரையில் இருந்து 2.1 கிலோமீட்டர் உயரத்தில் லேண்டர் விக்ரம் இருந்தபோது, தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. லேண்டர் விக்ரமில் இருந்து சிக்னல் கிடைப்பதற்காக விஞ்ஞானிகள் கவலைதோய்ந்த முகத்துடன் காத்திருந்தனர்.

நேரம் செல்லச் செல்ல பரபரப்பு அதிகரித்த நிலையில், விக்ரம் லேண்டரில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை என்ற விவரத்தை இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்தார். கடைசியாக கிடைத்த டேட்டாக்கள் ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

விக்ரம் லேண்டரில் இருந்து சிக்னல் வரவில்லை என்ற விவரத்தை பிரதமர் மோடியிடமும் இஸ்ரோ தலைவர் சிவன் எடுத்துரைத்தார். அப்போது தைரியமாக இருங்கள், நம்பிக்கை இழக்க வேண்டாம் என விஞ்ஞானிகளிடம் கூறிய பிரதமர் மோடி, ஏற்ற இறக்கங்கள் என்பது இயல்புதான் என்றும், இதுவரை சாதித்திருப்பதே மிகப்பெரிய சாதனைதான் என்றும் குறிப்பிட்டார்.

நிலவில் லேண்டர் விக்ரம் தரையிறங்கும் நிகழ்வை, தம்முடன் இணைந்து காணவந்திருந்த மாணவ-மாணவிகளுடனும் கலந்துரையாடிய பின்னர் மோடி அங்கிருந்து விடைபெற்றுச் சென்றார்.

லேண்டர் விக்ரமிலிருந்து சிக்னல் கிடைக்காத நிலையில், அது வெற்றிகரமாக தரையிறங்கியதா இல்லையா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் இஸ்ரோ வெளியிடவில்லை.

அதேசமயம், நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சந்திராயன்-2 ஆர்பிட்டர் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில், அதன் மூலம் லேண்டர் விக்ரமின் நிலை குறித்து உறுதிப்படுத்திய பின்னர் இஸ்ரோ உரிய அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே