விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை மேற்கொள்ள இதுவரை முடியவில்லை

நிலவில் விக்ரம் லேண்டர் இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதிலிருந்து எந்த தகவலும் இதுவரை வரவில்லை என இஸ்ரோ தெரிவித்துள்ளது. லேண்டருடன் தகவலை ஏற்படுத்த தொடர்ந்து அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லண்டருடன் தொடர்பு ஏற்படுத்த தீவிரமாக முயற்சித்து வருவதாக தகவல் அளித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலம் அனுப்பப்பட்டது.  லேண்டர் விக்ரமை நிலவில் தரை இறக்கும் முயற்சி கடந்த 7ம் தேதி அதிகாலை மேற்கொள்ளப்பட்டது. மிகவும் சிக்கலான இப்பணியின் கடைசி நிமிடத்தில் லேண்டரில் இருந்து இஸ்ரோ மையத்துடனான சிக்னல் துண்டிக்கப்பட்டது.

இதனால், லேண்டர் வெற்றிகரமாக தரை இறங்கியதா தெரியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, நிலவின் மேற்பரப்பில் சுற்றி வரும் சந்திராயன்-2 ஆர்பிட்டர் கலன், தனது கேமரா மூலம் நிலவில் லேண்டர் விழுந்த இடத்தை படம் பிடித்து அனுப்பியது.

லேண்டர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், அதிலிருந்து சிக்னல் கிடைக்கவில்லை என இஸ்ரோ தெரிவித்திருந்தது. சோலார் உதவியுடன் செயல்படும் லேண்டரின் ஆயுட்காலம் 14 நாட்கள் மட்டுமே. இதில் 4 நாட்கள் முடிந்துவிட்ட நிலையில், இன்னும் 10 நாட்களே எஞ்சியுள்ளன. இதற்குள் லேண்டரில் இருந்து சிக்னலை மீட்டெடுப்பதற்கான முயற்சியில் இஸ்ரோ தீவிரமாக இறங்கி உள்ளது.

இந்த நிலையில் விக்ரம் லேண்டரை துல்லியமாக படம் பிடிக்க ஆர்பிட்டரை நிலவின் அருகில் கொண்டு செல்ல இஸ்ரோ முயற்சி செய்து வருகிறது.

நிலவில் இருந்து 100 கிலோ மீட்டர் சுற்றுவட்டப்பாதையில் இருக்கும் ஆர்பிட்டரின் தூரத்தை 50 கி.மீ-ஆக குறைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. மேலும், நிலவின் தரைப்பகுதியில் விழுந்த விக்ரம் லேண்டர் சேதமடையாமல் இருப்பதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சற்று சாய்த்த நிலையில் உள்ள லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சிகள் தொடந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் கூறியிருந்தனர்.

ஆனால் விக்ரம் லேண்டரில் இருந்து இதுவரை எந்த வித சிக்கனலும் வரவில்லை என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மேலும், ஆர்பிட்டர் மூலம் லேண்டரை தொடர்பு கொள்ள அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே