விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையம் தேர்வு செய்யப்பட்டு, அதை மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன், விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் அலுவலர் சந்திரசேகர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து, அதற்கான ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும் தேர்தல் ஆணையத்தின் சார்பாகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையமாக சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இ.எஸ். தனியார் பொறியியல் கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கக் கூடிய அறைகளை மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன், விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் அலுவலர் சந்திரசேகர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாவட்ட ஆட்சியர், வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என தெரிவித்தார்.