வடிவேலு படப்பாணியில் கொள்ளையடிக்கச் சென்றவன் சிக்கினான்..!

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் நூதன முறையில் கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையன் திடீரென வீட்டின் உரிமையாளர் வந்ததால் வசமாகச் சிக்கிக் கொண்டான்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் காமராஜ் நகர் பகுதியில் வசிப்பவர் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் சிவசாம்பு. வெளியூர் சென்றிருந்த இவர் நேற்று வீடு திரும்பினார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு திடுக்கிட்டார்.

ஆனால் வீட்டுக்குள் ஆள் நடமாட்டம் இருப்பதை அறிந்த சிவசாம்பு, உடனடியாக கூச்சலிட்டதால் உள்ளிருந்த திருடன் மேல்மாடிக்கு சென்று அங்கிருந்து காம்பௌண்ட் சுவர் ஏறி வெளியேற குதித்தபோது காலில் காயம் ஏற்பட்டு ஓடமுடியாததால் தவித்தவனை பொதுமக்கள் பிடித்து போளூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலிசாரின் விசாரணையில் அந்தத் திருடன் கண்ணமங்கலம் அடுத்த காளசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த சதீஷ் என்பது தெரிய வந்தது.

சிவசாம்புவின் பூட்டியிருந்த வீட்டை நோட்டமிட்ட சதீஷ், முன்பக்க கதவினை உடைத்து வீட்டினுள் சென்று நகைகள், 5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு பின்னர், சமையல் அறையில் இருந்த மிளகாய் பொடியை வீட்டினுள் அவன் சென்ற இடத்தில் எல்லாம் வடிவேல் படப்பாணியில் தூவி விட்டு வெளியே செல்ல தயாராக இருக்கும்போதுதான் போலீசில் சிக்கியுள்ளான்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே