வங்கதேச அரசுடனான ரூ.7200 கோடி ஒப்பந்தம் குறித்து ரிலையன்ஸ் நிறுவனம் தகவல்

மின்சாரக் கொள்முதல் தொடர்பாக வங்க தேச அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக ரிலையன்ஸ் பவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் நாளொன்றுக்கு 720 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய வங்க தேச அரசு 22 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதற்காக வங்க தேச தலைநகர் டாக்காவில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நாராயண கண்ட் மேக்ன கார்ட் என்ற இடத்தில் 7,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க உள்ளதாகவும், 2022-ம் ஆண்டு முதல் மின் நிலையம் செயல்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதைப்போல், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களை செயல்படுத்த சீனாவுடன் கடந்த வாரம் வங்க தேசம் ஒப்பந்தம் செய்தது. சுமார் 2 ஆயிரத்து 879 கோடி ரூபாய் முதலீட்டில் 2023-ம் ஆண்டில் இருந்து நாளொன்றுக்கு 500 மெகாவாட் மின்சாரத்தை தயாரிக்க இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் மொத்த மக்கள் தொகையான 16 கோடி பேருக்கும் மின்சாரம் வழங்க முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக வங்க தேச அரசு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே