மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 18 ஆயிரம் கன அடியாக குறைந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 18 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. 16 கண் பாலம் வழியாக உபரி நீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளதால், கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீங்கியுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டு, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த வாரம் தொடர்ந்து அதிகரித்து வந்தது.

மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை கடந்த ஏழாம் தேதி எட்டியது. அணைக்கு வரும் நீர் மொத்தமும் அப்படியே வெளியேற்றப்பட்டதால் சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடி வரை மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு தொடர்ந்து குறைந்து கொண்டே வந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து, அங்கிருந்து திறக்கப்படும் நீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 18 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. இதைத் தொடர்ந்து உபரி நீர் போக்கியான, 16 கண் பாலம் வழியாக தண்ணீர் திறப்பதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் நிறுத்தியுள்ளனர்.

8 நாட்களுக்குப் பிறகு உபரி நீர் திறப்பது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை முற்றிலும் நீங்கியுள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 23 ஆயிரம் கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சி ஆகவும்  உள்ளது. கடந்த ஒரு வாரமாக மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியில் தொடர்ந்து நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே