முக்கொம்பு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!

திருச்சி முக்கொம்பு அணைக்கு வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 38 மதகுகள் வழியாக கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.  

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர், கரூர் மாயனூர் தடுப்பணையை கடந்து முக்கொம்பு அணைக்கு வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடி வீதம் வந்து கொண்டிருக்கிறது. மாலைக்குள் நீர்வரத்து 60 ஆயிரம் கனஅடியை எட்டிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கொம்பு வந்து கொண்டிருந்த நீர் அனைத்தும் கல்லணைக்கு திறக்கப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் கூடுதல் தண்ணீரை கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கொள்ளிடம் ஆற்றில் மொத்தம் 38 மதகுகள் வழியாக, வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீரும் கல்லணைக்கு 33 ஆயிரம் கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு நேரில் ஆய்வு செய்தார். கொள்ளிடம் ஆற்றங்கரையில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு அறிவுறுத்தியுள்ளார்.

கொள்ளிடம் ஆற்றின் மேல் கட்டப்பட்ட நூற்றாண்டு பழமைவாய்ந்த அணை கடந்த ஆண்டு வெள்ள பெருக்கில் சேதமடைந்தது. கொள்ளிடம் அணையில் 1 லிருந்து 17 வரையிலான மதகுகள் சேதமடைந்த நிலையில் 17 முதல் 45 வரையிலான 28 மதகுகளிலும், வடக்கு பகுதியில் 10 மதகுகளிலும் 12 ஆயிரம் கன அடி தண்ணீரானது வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக முக்கொம்புவில் இருந்து வாத்தலைக்கு பொதுமக்கள் செல்வதற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த மண்ணால் ஆன தரைப்பாலமானது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.

முக்கொம்பில் இருந்து பிரியும் கொள்ளிடம் ஆறானது, தஞ்சை, கும்பகோணம், அரியலூர், கடலூர், வீராணம் ஏரி வரை நீண்டுள்ளது. நேரடி பயன்பாடு குறைவே என்றாலும், நிலத்தடி நீர் உயர்வு, ஏரிகளை நிரம்புதல் மூலமாக விவசாயத்திற்கு பெருமளவு உதவுகிறது.

இதேபோல் முக்கொம்பில் இருந்து புள்ளம்பாடி, பெருவளை, அய்யன் ஆகிய பாசன வாய்கால்களிலும் ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மண்ணச்சநல்லூர், லால்குடி, புள்ளம்பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்கள் பாசன வசதி பெறுகின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே