மாமல்லபுரத்தில் நேரில் ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு தொடர்பான முன்னேற்பாடுகளை பார்வையிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மாமல்லபுரம் செல்கிறார்.

மாமல்லபுரம் நகரில், சீன அதிபர் ஜின்பிங்குடன் பிரதமர் மோடி இந்த மாதத்தில் பேச்சு நடத்த உள்ளார். இந்த இருதரப்பு உச்சி மாநாட்டின்போது இரு தலைவர்களும் பேச்சு நடத்துவதோடு, கிழக்கு கடற்கரையோர எழில் நகரான மாமல்லபுரத்தின் புராதன சிற்பங்களையும் சின்னங்களையும் பார்வையிடுகின்றனர்.

யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டுள்ள மாமல்லபுரத்தின் சிற்பங்கள் குறித்தும், சிறப்புகள் குறித்தும் சீன அதிபருக்கு விளக்கப்பட உள்ளது.

இதற்கான ஏற்பாடுகள், மத்திய-மாநில அரசுகளின் உயரதிகாரிகள் கண்காணிப்பில் நடைபெற்று வருகிறது.

இரு தலைவர்களும் தங்கவுள்ள கோவளம் தாஜ் நட்சத்திர விடுதி, சுற்றிப் பார்க்க இருக்கும் மாமல்லபுரம் அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம், கலங்கரை விளக்கம், கடற்கரைக் கோயில் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மாமல்லபுரம் செல்கிறார். அங்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் முதலமைச்சர், பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்கிறார்.

அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம், கலங்கரை விளக்கம், கடற்கரை கோவில் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே, சீன அதிகாரிகள் குழு, மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் தமிழக தலைமைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்டோர் மாமல்லபுரத்தில் பலமுறை ஆய்வு நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே