மஹாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகன் போட்டி

மஹாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன், ஆதித்யா தாக்கரே ஓர்லி தொகுதியில் போட்டியிட இருப்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

மஹாராஷ்டிர சட்டமன்றத்துக்கு வரும் அக்டோபர் 21ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் சிவசேனா பாஜகவுடன் கூட்டணி அமைத்து களம் காண்கிறது.

முன்னதாக தொகுதிப் பங்கீட்டில் இருகட்சிகளுக்கும் இழுபறி நீடித்து வந்த நிலையில், அமித்ஷா பாஜக மாநில தலைவர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சில தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ள சிவசேனா, அக்கட்சியின் இளைஞரணி தலைவரான ஆதித்யா தாக்கரேவை ஓர்லி தொகுதியின் வேட்பாளராக அறிவித்துள்ளது.

மேலும் ஏற்கனவே எம்.எல்.ஏ பதவியிலிருப்பவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடவும் சிவசேனா வாய்ப்பளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மாநில உள்துறை அமைச்சரும், சாவந்த்வாடி தொகுதி உறுப்பினருமான தீபக் கேசர்கர், கோலாப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏவானா ராஜேஷ் க்ஷிர்சாகர் ஆகியோர் மீண்டும் தங்கள் தொகுதிகளிலேயே போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே, அவரது மகனும் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே என தாக்கரே குடும்பத்தினர் யாரும் இதுவரை தேர்தலில் போட்டியிடாத நிலையில், முதல் முறையாக ஆதித்யா தாக்கரே தேர்தலில் போட்டியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற்று மீண்டும் பாஜக – சிவசேனா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஆதித்யா தாக்ரே துணை முதலமைச்சராக பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே