மருத்துவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க ஐஏஎஸ் அதிகாரி செந்தில்ராஜ் நியமனம்

போராட்டம் நடத்தி வரும் அரசு மருத்துவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் அவர்களின் கோரிக்கை குறித்து பரிசீலிக்க ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.

அரசு ஆணைப்படி கூடுதல் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 4 கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் அரசு மருத்துவர்கள் உடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை சுமார் 6 மணி நேரம் நீடித்தது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அரசு மருத்துவர்களுடன் ஆலோசித்து விட்டு அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என்று மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் அவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க ஐஏஎஸ் அதிகாரி செந்தில் ராஜா வை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மருத்துவர்களின் 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அமைச்சர் விஜயபாஸ்கரின் அலட்சியமே மருத்துவர்களை போராடும் நிலைக்கு தள்ளி இருப்பதாக அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக வேதனை தெரிவித்திருக்கும் ஸ்டாலின் அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். மக்களுக்கு ஆற்றவேண்டிய மருத்துவ பணியை முக்கியத்துவத்தைக் கருதி அரசு மருத்துவர்கள் தங்களின் போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என மு க ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே