“மதராச பட்டினம் விருந்து” – தமிழக பாரம்பரிய உணவுத்திருவிழாவை, தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

மதராச பட்டினம் விருந்து, வாங்க ரசிக்கலாம், ருசிக்கலாம் என்ற பெயரில், தமிழக பாரம்பரிய உணவுத் திருவிழாவுக்கு சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை தீவுத் திடலில் இன்று தொடங்கி 3 நாட்களுக்கு இந்த உணவுத் திருவிழா நடைபெறுகிறது. தமிழகத்தின் பாரம்பரிய உணவுகள் விநியோகிக்கும் அரங்குகளுடன் கூடிய இந்த உணவுத் திருவிழாவை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்னரே மதராச பட்டினத்தில் தமிழர்கள் செல்வ செழிப்புடன் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என வரலாற்று ஆய்வுகளை சுட்டிக்காட்டி பேசினார். 

தொடக்க நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் உணவுத் திருவிழாவில், தமிழகத்தின் அனைத்து சிறப்பு உணவுகளும் இடம்பெற்று உள்ளது என்றார்.

வரகு, கம்பு, கேழ்வரகு என சிறுதானிய உணவுகளே, பெரும்பாலான மக்களின் உணவாக இருந்த நிலையில், இத்தகைய பாரம்பரிய உணவுகளை தவிர்ப்பதே நோய்களுக்கு காரணம் என முதலமைச்சர் குறிப்பிட்டார்.

எவ்வளவு செல்வம் இருந்தாலும் சர்க்கரை நோய் வந்துவிட்டால் ருசியான உணவை வேடிக்கை தான் பார்க்க முடியும் என முதலமைச்சர் குறிப்பிட்டார்.

முன்னோர்கள் வழங்கி சென்ற உணவுவகைகளை மீண்டும் பின்பற்ற தொடங்கினால் உடல் ஆரோக்கியத்துடன் சுகமாகவும் வாழலாம் என வலியுறுத்திய முதலமைச்சர், பாராம்பரிய உணவுகளை அன்றாடம் உண்போம் என உறுதியேற்போம் என குறிப்பிட்டார்.

அரசு யோகா மற்றும் இயற்கை கல்லூரி மாணவர்கள், மேடையில் யோகா செய்து காட்டினர். அதை, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பார்த்து ரசித்தனர்.

 தொடர்ந்து உணவு திருவிழா அரங்குகளை, அமைச்சர்களுடன் சென்று முதலமைச்சர் பார்வையிட்டார். அப்போது, கருப்பட்டி மிட்டாய் வகைகளை வாங்கிய எடப்பாடி பழனிசாமி, சில உணவு வகைகளை ருசி பார்த்தார்.

 தொடர்ந்து மீன் உணவு கண்காட்சியை முதலமைச்சர் பார்வையிட்டார். அப்போது மீன் உணவுகளை ருசி பார்க்க அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்த, இன்று வெள்ளிக்கிழமை என எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டார். உணவு திருவிழா அரங்கிற்குள் வைக்கப்பட்டிருந்த கையெழுத்து பலகையில், உணவே மருந்து என எழுதி முதலமைச்சர் கையெழுத்திட்டார்.

மழைநீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்பு தொடர்பான பள்ளி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியையும் தீவுத் திடலில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

இந்த பேரணியில் பள்ளி மாணவ-மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பேரணி தீவுத் திடலில் தொடங்கி சுற்றியுள்ள பகுதிகளுக்கு செல்கிறது.

இதேபோல, சென்னை முழுவதும் அரசுப் பள்ளிகளின் மாணவ-மாணவிகள், மழைநீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணியை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே