மதச்சார்பற்ற கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா நம்பிக்கை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகம் முழுவதும் மேற்கொண்ட பிரச்சாரத்தில் காணப்பட்ட மக்கள் எழுச்சியின் அடிப்படையில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறும். அதேநேரம் அதிமுக-பாஜக கூட்டணி படுதோல்வியை சந்திக்கும்.

தமிழகத்தில் காலூன்ற பாஜக தீவிரமாக முயற்சித்து வருகிறது. அதற்காக சாத்தியங்கள் இல்லாத சூழலில், தோல்வி விரக்தியில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பாஜக தலைவர்கள் தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

பாஜக, ஆர்எஸ்எஸ் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் முயற்சிகள் நம்நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைக்கிறது. மாநில உரிமைகளை பறித்து மதச்சார்பின்மை, மக்கள் நலன்களுக்கு எதிரான செயல்பாடுகளையே பாஜக முன்னெடுத்து வருகிறது.

மதம், மொழி, சாதி ஆகியவற்றை முன்னிறுத்தி மக்களை பிரித்தாளும் பணியைமேற்கொள்கின்றனர். தமிழகத்தில் அதற்கு சாத்தியங்கள் இல்லாதசூழலில் வீண் அவதூறுகளை பரப்புவதுடன், மாநிலத்தை கைப்பற்றவும் முயற்சிக்கின்றனர். பாஜகவின் 7 ஆண்டுகால ஆட்சியில் நாடு எவ்வித வளர்ச்சியும் பெறவில்லை. அதற்குமாறாக பொருளாதாரரீதியாக மிகவும் பாதிப்படைந்துள்ளோம். உள்நாட்டு உற்பத்தி பெரிதும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

இதுதவிர சமூக நலனுக்கு எதிரான தேசிய கல்விக் கொள்கையை பாஜக திணிக்கப் பார்க்கிறது. மேலும், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது. இதற்கு அதிமுக அரசும் உறுதுணையாக இருக்கிறது. அதிமுக பாஜக கூட்டணி மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். ஆட்சி மாற்றமே மக்களின் தீர்ப்பாக இருக்கும். மேலும், தேர்தல் ஆணையம் நடுநிலையாக இருந்து நேர்மையுடன் தேர்தலை நடத்த வேண்டும்.

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக தகவல்கள் வருகின்றன. அவற்றை தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இந்த தேர்தலில் பாஜகவையும் அதற்கு துணை போகும் அதிமுகவையும் நிராகரிக்கும் விதமாக திமுக தலைமையிலான கூட்டணியை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்திப்பின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், செயற்குழு உறுப்பினர் என்.பெரியசாமி, நிர்வாகக் குழு உறுப்பினர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் ஆகியோர் உடன் இருந்தனர்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே