தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மது அருந்தி விட்டு, சாலையின் நடுவே அமர்ந்து பிரியாணி சாப்பிட்டவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வரும் அந்த வீடியோவில், மதுபோதையில் தள்ளாடும் இருவர் தேனி – திண்டுக்கல் நெடுஞ்சாலையின் நடுவே வெள்ளைக் கோட்டருகே துண்டை விரித்து ஒய்யாரமாக அமர்ந்துள்ளனர்.
பின்னர் பிரியாணி பொட்டலத்தை பிரித்து ருசித்து சாப்பிடுகின்றனர். இதை வீடியோவாகப் பதிவு செய்து, விஸ்வாசம், பேட்ட உள்ளிட்ட படங்களின் பின்னணி இசையைக் கோர்த்து சமூக வலைத்தளங்களிலும் பரப்பி விட்டுள்ளனர்.
30 நிமிடத்திற்கும் மேலாக அவர்கள் நடு சாலையில் அமர்ந்து பிரியாணி உண்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். பேருந்து மற்றும் கனரக வாகன ஓட்டிகள் கொதிப்படைந்தனர்.
இதுபோன்ற போதை வெறியர்களால், ஏதுமறியா அப்பாவிகள் பாதிக்கப்பட வேண்டுமா? என்பதே இந்த வீடியோவைப் பார்ப்பவர்களின் கேள்வியாக உள்ளது.
அந்த இருவரும் தேவதானப்பட்டியைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் கண்டுகொள்ளப்பட்ட பிறகும் அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், வீடியோவில் இருப்பது சுரேஷ் மற்றும் பெருமாள் என்பது தெரியவந்தது. இதையடுத்து பெருமாளை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள சுரேஷை தேடி வருகின்றனர்.