போக்குவரத்து விதிகளை மீறினால் அபராதம் பன்மடங்கு அதிகரிப்பு

திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தார். இந்த சட்டதிருத்தம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்த புதிய சட்டத்தின்படி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு பத்தாயிரம் ரூபாயும், அதிவிரைவாகவும், பொறுப்பற்ற முறையிலும் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 5,000 ரூபாயும், உரிய ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டினால் 5,000 ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும்.

இதேபோல ஹெல்மெட் அணியாமல், கார்களில் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாயும், வாகனம் ஓட்டிக் கொண்டிருந்த போதே செல்போனில் பேசினால் 5,000 ரூபாயும், அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு 20,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்.

இதேபோல் சிறுவர்கள் இரு சக்கரம் அல்லது நான்கு சக்கர வாகனங்களை ஓட்டினால் வாகன பதிவு ரத்து செய்யப்படுவதோடு அவர்களின் பெற்றோருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என இந்த சட்டத் திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு அவசர கால ஊர்திகளுக்கு வழிபடாமல் இருந்தால் பத்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட உள்ளது. இந்த அபராத தொகையை பொது மக்களுக்கு மட்டுமின்றி அதிகாரிகளுக்கும், காவல் துறையினருக்கும் பொருந்தும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே