தந்தை பெரியாரின் 141ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை சிம்சன் பெரியார் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மானமும், அறிவும் மனிதருக்கு அழகு என்று போதித்து, தமிழ்ச் சமூகத்தின் உயர்வுக்காக தமது வாழ்நாள் இறுதி வரை அயராது உழைத்தவர் தந்தை பெரியார்.
அதனால்தான், “தொண்டு செய்து பழுத்த பழம், தூய தாடி மார்பில் விழும், மனக்குகையில் சிறுத்தையில் எழும், மண்டைச் சுரப்பை உலகு தொழும்” என தந்தை பெரியாருக்கு புகழாரம் சூட்டினார் பாவேந்தர். பகுத்தறிவு பகலவன் என்று தமிழர்களால் போற்றப்படும் தந்தை பெரியாரின் 141ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு, சென்னை அண்ணாசாலை சிம்சன் சிக்னல் அருகே அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்ட பெரியார் உருவப்படத்திற்கு அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். திமுக நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் பெரியார் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.