பணமோசடி தொடர்பாக தம் மீது லைகா நிறுவனம் கூறியுள்ள குற்றச்சாட்டுகள், அடிப்படை ஆதாரமற்றவை என ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவன இயக்குநர் கருணாமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், லைகா நிறுவனத்தின் பணப்பரிவர்த்தனைகள் அனைத்தும் சுபாஷ்கரன் மற்றும் லண்டன் அலுவலகங்களைச் சார்ந்தே நடைபெறும் என்றும், தனக்கு 1,000 ரூபாய்க்குக் கூட காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
அப்படி இருக்கும் பட்சத்தில், தாம் எப்படி கட்டுமான நிறுவனத்திற்கு 25 கோடி ரூபாய் கொடுத்திருக்க முடியும் என்று கருணாமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
எமன் மற்றும் எனக்கு இன்னொரு பேர் இருக்கு ஆகிய படங்களின் மொத்த தயாரிப்புச் செலவே 10 கோடி ரூபாய்க்கும் குறைவு தான் என்ற நிலையில், வெளிநாட்டு உரிமையை எப்படி 95 கோடி ரூபாய்க்கு விற்றிருக்க முடியும் என்றும் வினவியுள்ளார்.
லைகா என்ற பெயரால் நிறுத்தி வைக்குமளவுக்குப் பிரச்சனையான விஜய் நடித்த கத்தி திரைப்படம் தன்னுடைய முயற்சியால் தான் நல்லவிதமாக வெளிவந்து பெரிய வெற்றி பெற்றதாகவும் கருணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.
வந்தா ராஜாவா தான் வருவேன் மற்றும் இந்தியன் 2 ஆகிய திரைப்படங்களை சுபாஷ்கரனுக்கு தெரியாமல் தாம் தொடங்கி நட்டம் ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள கருணாமூர்த்தி, இந்தியன் 2 பட பூஜையில் சுபாஷ்கரன் பங்கேற்றது தற்செயலா?? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
லைகாவின் நட்டங்கள் அனைத்தையும் தனது தலையில் கட்டப் பார்த்ததால்தான் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறியதாகவும் விளக்கம் கருணாமூர்த்தி அளித்துள்ளார்.