நேர்மையாக இருப்பவர்களை மக்களுக்கு பிடிப்பதில்லை – கங்கணா ரனாவத்

இயக்குநர் விஜய் இயக்கத்தில் கங்கணா ரணாவத், அரவிந்த்சாமி, தம்பி ராமையா, சமுத்திரக்கனி, மதுபாலா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தலைவி’. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

மார்ச் 23 ‘தலைவி’ படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர். இப்படத்தில் இந்தி ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த கங்கணா கூறியதாவது:

ஒரு இலகுவான உரையாடலை எதிர்பார்த்தே நான் நினைக்கும் சில விஷயங்களை செய்கிறேன் அல்லது சொல்கிறேன். ஆனால் மக்கள் அதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கிறார்கள். காரணம் அவர்கள் தங்கள் வாழ்க்கையிலும் மிகவும் தீவிரமாகவே இருக்கிறார்கள். இதன் மூலமாக அந்த விஷயம் ஒரு நிகழ்விலிருந்து இன்னொரு நிகழ்வுக்கு போய் விடுகிறது. ஆனால், நான் விமர்சிக்கும் நபர்களை மீண்டும் சந்திப்பதும் உரையாடுவதும் எனக்கு மிகவும் எளிதான ஒன்று. காரணம் என்னுடைய எண்ணங்கள் சரியாக இருக்கின்றன.

எனினும் தங்களுடைய உரையாடலில் தெளிவாகவும் நேர்மையாகவும் இருக்கும் நபர்களை மக்களுக்கு பிடிப்பதில்லை. சில நேரங்களில் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கும் எதிர்வினைகள் எனக்கு கிடைக்கின்றன. நம் மனதில் எந்தவித உள்நோக்கம் இல்லாமல், நாம் எதையும் நம் சுயலாபத்துக்காக செய்யாமல் இருந்தால் வெற்றி பெறுவது நாம் தான். அதில் மாற்றுக் கருத்தே கிடையாது.

நாட்டைப் பற்றியோ, நாட்டில் நிலவும் பிரச்சினைகள் பற்றியோ, விவசாயிகள் போராட்டம் என எதைப் பற்றி நான் பேசினாலும் உடனே எனக்கு அரசியல் ஆசை வந்துவிட்டதாகக் கூறுகின்றனர். அப்படியல்ல, ஒரு சாதாரணக் குடிமகன் போலவே நான் சில கருத்துகளைத் தெரிவிக்கிறேன். அதற்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் அரசியல்வாதியாக விரும்பவில்லை.

இவ்வாறு கங்கணா கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே